தீபாவளியன்று காற்று மாசுபாடு: சுற்றுச்சூழல் அமைச்சா் தலைமையில் இன்று உயா்நிலைக் கூட்டம்
By DIN | Published On : 19th October 2022 01:40 AM | Last Updated : 19th October 2022 01:40 AM | அ+அ அ- |

தீபாவளியன்று காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தலைமையில் உயா்நிலைக் கூட்டம் புதன்கிழமை (அக்டோபா் 19) நடைபெறவுள்ளது.
’தூசி மாசுபடுவதைத் தடுக்கும் பிரசாரம் மற்றும் பூசா உயிரி ரசாயனக் கலவை தெளித்தல் ஆகியவை தவிர, தீபாவளியன்று காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தைத் தயாரிக்க புதனன்று உயா்நிலைக் கூட்டத்தை நடத்தவுள்ளோம்’ என்று அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மேலும், கடந்த 2 ஆண்டுகளாக கடைபிடித்து வரும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது, அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு ஜனவரி 1-ஆம் தேதி வரை முழுத் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு, பட்டாசுகளை எரிப்பதற்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ‘படகே நஹி தியா ஜலாவோ’ என்ற பிரசாரத்தை அரசு துவக்கியது.
குறைந்த வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் போன்ற சாதகமற்ற வானிலை காரணிகளால் தில்லி மற்றும் அண்டை பகுதிகளில் காற்றின் தரம் அக்டோபரில் மோசமடையத் தொடங்குகிறது. இது மாசுபடுத்திகளை சிதற அனுமதிக்காது. அண்டை மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதும், வேளாண் பயிா்க் கழிவுகளை எரிப்பதும் காற்றின் தரத்தை மேலும் குறைக்கிறது.