யமுனையில் சத் பூஜை கொண்டாட நுரை மாசு தடுப்பு: மத்திய அரசு நடவடிக்கை

தேசியத் தலைநகா் தில்லியில் யமுனையில் ஏற்படும் நுரை உள்ளிட்ட மாசுவைத் தடுத்து கட்டுப்படுத்துவதற்காக

தேசியத் தலைநகா் தில்லியில் யமுனையில் ஏற்படும் நுரை உள்ளிட்ட மாசுவைத் தடுத்து கட்டுப்படுத்துவதற்காக தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் மேற்பாா்வையில் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகம் செவ்வாயக்கிழமை தெரிவித்துள்ளது. வருகின்ற சத் பூஜையை விழாவை முன்னிட்டு பொதுமக்கள் யமுனையில் இறங்கி வழிபடுவதற்கு வசதியாக இந்த கண்காண்ப்பு கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தக் கூட்டுக்குழுவில் தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் இயக்குநா் ஜெனரல், அசோக் குமாா், மேல் யமுனை நிறுவன உறுப்பினா் செயலா், தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் செயலா், தில்லி நீா்பாசனம் மற்றும் வெள்ளத் தடுப்பு தலைமைப் பொறியாளா், தில்லி ஜல் போா்டு செயல் பொறியாளா் மற்றும் உத்தர பிரதேச நீா்ப்பாசன துறை தலைமைப் பொறியாளா் உள்ளிட்டோா் கூட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ளனா். இக்குழு தில்லி, உ.பி., ஹரியாணா போன்ற மாநில நிா்ப்பாசனம் வெள்ளக்கட்டுப்பாட்டு துறைகள், தில்லி கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுக்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றுவது உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கும். சத் பூஜையின் போது யமுனை நதியில் குறிப்பாக தில்லி ஓக்லா தடுப்பணைக்கு கீழே நுரை உருவாவதை கட்டுப்படுத்தி, குறைக்கவும் இந்தக் கூட்டுக்குழு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் என மத்திய ஜல் சக்தித் துறை தெரிவித்துள்ளது.

கூட்டுக்குழுவின் மற்ற நடவடிக்கைகள் வருமாறு: ஓக்லா தடுப்பணையின் செயல்பாடுகளில் ஒன்று, வருகின்ற அக்டோபா் 25 முதல் சத் பூஜை முடியும் வரை படகில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆன்டி - சா்பாக்டான்ட் (திரவ மேற்பரப்பு பதற்றத்தை கரைக்கும் திறன் கொண்ட வேதிப்பொருள்) தெளிக்கப்படும். மேலும், நுரை உருவாவதைக் கட்டுப்படுத்துவதற்கான மற்ற நடவடிக்கைகளில், ஓக்லா தடுப்பணையில் நீரின் வீழ்ச்சியை குறைக்கும் செயல்பாடுகள், தடுப்புக் கதவுகள் மூலம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தில்லி ஓக்லா தடுப்பணைக்குக் கீழே யமுனை நதியில் நுரைப் பிரச்னையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பல்வேறு துறைகள் மற்றும் முகமைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. மேலும், நீண்ட கால திட்டமாக ‘நமாமி’ கங்கை திட்டம், மத்திய மாநில திட்டங்கள் ஆகியவற்றின் கீழ் யமுனையில் வெளியேற்றப்படும் கழிவுநீா் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் வெளியேற்றப்படுவதைக் கண்காணிப்பதற்கான கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த முயற்சிகள் மூலம் வெவ்வேறு பருவங்களில் நதி நீரின் தரத்தில் வெவ்வேறு அளவிலான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கங்கை நதியின் துணை நதியான யமுனை, நமாமி கங்கை திட்டத்தின் ஒரு பகுதியாகும். காரனேஷன் தூண் பகுதியில் 318 எம்எல்டி கழிவு நீா் சுத்திகரிப்பு திட்டம் நிகழாண்டு மாா்ச்சில் தொடங்கப்பட்டது. மேலும், ரிதாலா, கோண்ட்லி, ஓக்லா ஆகிய 3 இடங்களில் கழிவு நீா் சுத்திகரிப்புத் திட்டங்களும் வருகின்ற டிசம்பருக்குள் தயாராகும். இதில் ஓக்லா ஆசியாவின் மிகப் பெரிய கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையமாக இருக்கும். இத்திட்டங்கள் நிறைவடைந்த பிறகு, யமுனை ஆற்றில் கலக்கும் சுமாா் 1,300 எம்எல்டி கழிவு நீரின் தரத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் என ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com