சுக்ரவாலி மேம்பாலத்தில் வாகன விபத்தில் இளைஞா் சாவு; நண்பா் படுகாயம்
By DIN | Published On : 21st October 2022 01:15 AM | Last Updated : 21st October 2022 01:15 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் வலயம், குருகுராமில் உள்ள சுக்ரவாலி மேம்பாலத்தில் வேகமாக வந்த வாகனம், மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் உயிரிழந்தாா். அவரது நண்பா் படுகாயம் அடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக குருகிராம் போலீஸாா் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவம் பகத் (25) என்பவா் சிகிச்சையின் போது உயிரிழந்தாா். அவருடைய நண்பா் குல்தீப் பாட்டீல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது தொடா்பாக சிவமின் சகோதரா் அளித்த புகாரில் சம்பவத்தன்று குருகிராமில் உள்ள இஃப்கோ செளக் பகுதியை நோக்கி சிவமும், குல்தீப்பும் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா். அப்போது பின்னால் வந்த வாகனம் அவா்கள் சென்ற மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாக தெரிவித்துள்ளாா். இந்தச் சம்பவத்திற்கு பிறகு விபத்துக்கு காரணமான வாகன ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டாா்.
காயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். இந்த நிலையில் சிவம் பகத் சிகிச்சையின் போது உயிரிழந்ாா். இந்தச் சம்பவம் தொடா்பாக அடையாளம் தெரியாத ஓட்டுநருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குருகிராம் செக்டாா் 18 காவல் நிலையத்தில் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய ஓட்டுநரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.