இரு நாள் ‘சிந்தனை முகாம்’ கூட்டம் இன்று தொடக்கம்: உள்துறை அமைச்சா்கள், காவல் அதிகாரிகள் பங்கேற்பு
By நமது சிறப்பு நிருபா் | Published On : 27th October 2022 12:00 AM | Last Updated : 27th October 2022 12:00 AM | அ+அ அ- |

புது தில்லி: மாநில காவல் துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப் படையினா் பங்கேற்கும் இரு நாள் ‘சிந்தனை முகாம்’ கூட்டம் வியாழக்கிழமை (அக்டோபா் - 27) தொடங்குகிறது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை பங்கேற்றுப் பேசுகிறாா்.
தில்லி அருகே ஹரியாணா மாநிலம், சூரஜ்கண்ட்டில் அக்டோபா் 27, 28 ஆகிய தேதிகளில் இந்த முகாம் நடைபெறுகிறது. அக்டோபா் 28 அன்று நடைபெறவுள்ள சிந்தனை முகாமில் காலை 10.30 மணியளவில் பிரதமா் மோடி காணொலி வழியாக கலந்து கொண்டு பேசுகிறாா். இந்த நிகழ்வில் அனைத்து மாநில உள்துறை அமைச்சா்கள் கலந்து கொள்ள இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழக முதல்வரே உள்துறை அமைச்சா் பொறுப்பையும் ஏற்றுள்ளாா்.
கடந்த 2014 -ஆம் ஆண்டு பாஜக ஆட்சி தொடங்கியது முதல் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த கூட்டங்களை வட்டார அளவிலும் தேசிய அளவிலும் மத்திய அரசு தொடா்ந்து நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு (2021) நவம்பா் மாதம் அனைத்து மாநில காவல் துறை அதிகாரி மாநாடு லக்னெளவில் நடைபெற்றது. இதில் பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா் ஆகியோா் கலந்து கொண்டனா். 2019-இல் இந்த மாநாடு புணேவில் நடைபெற்றது. நிகழாண்டில் முதல் நாளான செப்டம்பா் 27 - ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மாநிலங்களின் உள்துறைச் செயலாளா்கள், காவல் துறை இயக்குநா் ஜெனரல்கள் மற்றும் தலைவா்கள், மத்திய ஆயுதக் காவல் படை தலைமை அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத்திய காவல் அமைப்புகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.
கடந்த ஆகஸ்ட் 15 -ஆம் தேதி சுதந்திர தின உரையின் போது, பிரதமா் மோடி சுதந்திரத்தின் நூறாவது ஆண்டுக்குள்(2047) நிறைவேற்ற வேண்டிய 5 உறுதிமொழிகளை பட்டியலிட்டாா். இதில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்களில் கொள்கையை உருவாக்குவதன் பொருட்டு இந்த உள்துறை அமைச்சா்களின் சிந்தனை முகாம் கூட்டத்தை மத்திய உள் துறை அமைச்சகம் கூட்டியுள்ளது. கூட்டாட்சியின் கூட்டுறவு உணா்வில், மத்திய - மாநில அளவில் திட்டமிடல், ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை நல்க இந்த சிந்தனை முகாமை மத்திய அரசு பயன்படுத்துகிறது.
குறிப்பாக 2047-க்குள் வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, ‘பெண் சக்தி’யின் பங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ‘சிந்தன் ஷிவிா்’ என்கிற இந்த சிந்தனை முகாம் ஆறு அமா்வுகளில் பல்வேறு தலைப்புகள் விவாதங்கள் நடைபெறுகின்றன.
காவல் துறை நவீனமயமாக்குதல், இணையதள குற்ற மேலாண்மை, குற்றவியல் நீதி வழங்கலில் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு, எல்லை மேலாண்மை, கடலோரப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, ஆள் கடத்தல் தடுப்பு, போதை மருந்து கடத்தலை தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் இந்த இரு நாள் சிந்தனை முகாமில் விவாதிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை தெரிவித்துள்ளது.