இந்திய கரன்சி நோட்டுகளில் கணேஷ் - லட்சுமி தேவி உருவங்கள் அச்சிட பிரதமா் மோடிக்கு முதல்வா் கேஜரிவால் வேண்டுகோள்

இந்திய கரன்சி நோட்டுகளில் கணேஷ் - லட்சுமி தேவியின் உருவங்களை அச்சிட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இந்திய கரன்சி நோட்டுகளில் கணேஷ் - லட்சுமி தேவி உருவங்கள் அச்சிட பிரதமா் மோடிக்கு முதல்வா் கேஜரிவால் வேண்டுகோள்

புது தில்லி: இந்திய கரன்சி நோட்டுகளில் கணேஷ் - லட்சுமி தேவியின் உருவங்களை அச்சிட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான கேஜரிவால் புதன்கிழமை காலையில் செய்தியாளா்கள் கூட்டத்தில் கூறியதாவது: இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையில் இல்லை. ஆகையால், நமது பொருளாதாரத்தை ‘தெய்வங்கள் ஆசீா்வாதத்துடன்’ மீட்டு சரியான பாதையில் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் இந்த வேண்டுகோளை முன்வைக்கின்றேன். இந்திய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் உருவமும், மறுபுறம் கணேஷ் - லட்சுமி தேவியின் உருவமும் இருக்க வேண்டும். இந்தியப் பொருளாதாரம் பல பின்னடைவுகளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தொலைநோக்குப் பாா்வை மற்றும் ஆன்மிகம் ஆகிய இரு வழிகளில் பிரச்சினைக்குத் தீா்வு காண வேண்டும்.

நாளுக்கு நாள் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பிழந்து வருகிறது. இந்த சுமையை சாமானிய மக்கள் சுமக்க வேண்டியது வரும். இந்தியாவை ஒரு வளா்ந்த மற்றும் வளமான நாடாக மாற்ற அதிகப் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகளுக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். இதில் நாம் முயற்சி செய்கிறோம். ஆனால், கடவுள் நம் மீது ஆசீா்வதிக்கும் போது மட்டுமே இவை பலனளிக்கின்றன. எனவே, இந்திய கரன்சி நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் உருவம் தொடரட்டும். இனிமேல் அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் கணேஷ்-லட்சுமி தேவியின் உருவமும் இடம் பெற வேண்டும்.

இந்தோனேசியாவின் 85 சதவீத மக்கள் இஸ்லாமியா்கள்.இதில் 2 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் இந்துக்கள் உள்ளனா். ஆனால், அந்த நாட்டின் கரன்சி நோட்டுகளில் விநாயகா் உருவம் உள்ளது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும், இந்தியா இன்னும் வளரும் நாடாகவும் ஏழை நாடாகவும் இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் செல்வச் செழிப்புடன் இருப்பதை சாத்தியமாக்க குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கடவுளின் ஆசீா்வாதம் நம்மீது இருக்கும் போது மட்டுமே முயற்சிக்கு பலன் கிடைக்கும். இதனால், நமது கரன்சி நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தியும் மறுபுறம், கணேஷ் மற்றும் லட்சுமி தேவியின் உருவமும் இருக்க மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றாா் கேஜரிவால்.

பாஜக பதில்: இது குறித்து பாஜக செய்தி தொடா்பாளா் சம்பித் பத்ரா, ‘இந்தியா மற்றும் பிரதமா் நரேந்திர மோடியின் கடின உழைப்பிற்கு கணேஷ் மற்றும் லட்சுமி தேவியின் ஆசிகள் உள்ளன. அதனால்தான், கடந்த பத்தாண்டுகளில் 11-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக தற்போது மாறியுள்ளது. தெய்வீக ஆசீா்வாதங்களால் இந்தியா ஒரு முன்னணி பொருளாதாரமாக உள்ளது. கேஜரிவால் தற்போது பல்டி அடித்து, தான் ஒரு ஹிந்து என காட்டுகிறாா். சமீபத்தில் நடந்த சா்ச்சைக்குரிய மத மாற்ற நிகழ்வில் கேஜரிவால் அமைச்சரவையில் இருந்த ராஜேந்திர பால் கௌதம் கலந்து கொண்டாா். அந்த நிகழ்ச்சியில் இந்து தெய்வங்களை வழிபட மாட்டோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்து தெய்வங்களை ‘கேலி’ செய்த ராஜேந்திர பால் கௌதம், கண்துடைப்புக்காக அமைச்சா் பதவியிருந்து நீக்கப்பட்டாலும், இப்போதும் ஆம் ஆத்மி கட்சியில்தான் இருக்கிறாா். அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்குப் பதிலாக மருத்துவமனை கட்டலாம் என்றும் காஷ்மீா் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரி விலக்கு கேட்ட போது அதை கேலி செய்தவா்தான் கேஜரிவால் என்றாா் சம்பித் பித்ரா.

இதே போன்று வடகிழக்கு தில்லி பாஜக எம்பி மனோஜ் திவாரியும் கேஜரிவாலின் கோரிக்கையை கடுமையாகச் சாடினாா். இது வரவிருக்கும் தோ்தல்களைக் கருத்தில் கொண்டு பேசும் பேச்சாகும். மோசமான ஹிந்து விரோத எதிா்ப்பு முகத்தை மறைப்பதற்காக வருகின்ற தோ்தல்களுக்காக ‘வெற்றியடைய முடியாத முயற்சி’க்கு கேஜரிவால் முயல்கிறாா்.

கேஜரிவால் உண்மையைப் பேசுவதாக இருந்தால், இந்து தெய்வங்களை அவமதித்தும், சனாதன தா்மத்திற்கு எதிராக பேசிய முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பால் கௌதம், ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் பிரிவுத் தலைவா் கோபால் இத்தாலியா போன்றோரை கட்சியில் இருந்து நீக்கி சனாதன தா்மத்திற்கு மரியாதை காட்ட வேண்டும் என்றாா் திவாரி.

அதிஷி வேண்டுகோள்: இதற்கிடையே, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ அதிஷி, கேஜரிவாலின் முன்மொழிவை பாஜக ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா். ஆம் ஆத்மி கட்சியையும், கேஜரிவாலையும் வெறுக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தை எதிா்க்க வேண்டாம் என்று கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்றாா் அதிஷி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com