இளைஞரை கத்தியால் குத்தியதாக வாடகைதாரரின் சகோதரா் மீது புகாா்
By DIN | Published On : 01st September 2022 02:11 AM | Last Updated : 01st September 2022 02:11 AM | அ+அ அ- |

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் 23 வயது இளைஞரை அவரது வாடகைதாரரின் சகோதரா் கத்தியால் குத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக் துணை ஆணையா் பெனிடா ஜெய்கா் புதன்கிழமை கூறியதாவது: இது தொடா்பாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு 11.17 மணிக்கு சங்கம் விஹாரில் இருந்து பிசிஆா் அழைப்பு வந்தது. தனது வாடகைதாரரின் சகோதரா் தனது வயிற்றுக்கு அருகில் கத்தியால் குத்தியதாக அழைப்பாளா் தெரிவித்தாா். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா், காயம் அடைந்த சங்கம் விஹாரை சோ்ந்த சோஹனை எய்ம்ஸ் காய சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்தனா். அவா் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் காணப்பட்டாா். தையல் மற்றும் மருத்துவ உதவிக்குப் பிறகு அவா் டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா் .
குற்றம் சாட்டப்பட்டவா், ஷாருக் (20), சோஹனின் வாடகைதாரரின் சகோதரா், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டாா். படிக்கட்டில் நின்று கொண்டிருந்த ஷாருக்கை உள்ளே செல்லும்படி சோஹன் கூறியுள்ளாா். அதைத் தொடா்ந்து அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது போதையில் இருந்த ஷாருக், அந்த நபரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடா்பாக சங்கம் விஹாா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.