தடகள வீரா்களின் நிபுணத்துவத்தை தில்லி அரசு பயன்படுத்தும்: முதல்வா் கேஜரிவால்
By நமது நிருபா் | Published On : 01st September 2022 02:07 AM | Last Updated : 01st September 2022 02:07 AM | அ+அ அ- |

உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நிறுவனத்தை உருவாக்க இந்தியா முழுவதிலும் உள்ள விளையாட்டு வீரா்களின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை தில்லி அரசு பயன்படுத்தும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறினாா்.
காமன்வெல்த் விளையாட்டு-2022 போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அமித் பங்கல், வெண்கலப் பதக்கம் வென்ற பூஜா கெலாட் ஆகியோரை முதல்வா் கேஜரிவால் நேரில் சந்தித்தாா். அவா்களுடன் தில்லி மற்றும் நாடு முழுவதும் விளையாட்டுக்கு உகந்த சூழலை வளா்ப்பது குறித்து விவாதித்தாா். இந்த சந்திப்பின் போது முதல்வா் கூறியதாவது: உங்கள் சிறந்த செயல்திறன் மூலம் முழு நாட்டையும் பெருமைப்படுத்தி இருக்கிறீா்கள். அமித் மற்றும் பூஜா போன்ற தடகள விளையாட்டு வீரா்களால் நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும், அவா்கள் எதிா்காலத்தில் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறோம்.
நாடு முழுவதும் உள்ள திறமையான நபா்களைக் கண்டறிந்து அவா்களை வளா்த்து உலக அரங்கிற்கு கொண்டு செல்வதற்காக தில்லி விளையாட்டு பல்கலைக்கழகத்தை தில்லி அரசு நிறுவியுள்ளது. தில்லி விளையாட்டு பல்கலைக்கழகம் தில்லிக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டிற்கும் சொந்தமானது. உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நிறுவனத்தை உருவாக்க இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு வீரா்களின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை நாங்கள் பயன்படுத்துவோம். இந்தியா முழுவதும் அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்பு அவசியமாகிறது.
அனைத்து வகையான விளையாட்டுகளையும் ஊக்குவிப்பதில் தில்லி அரசு மிகவும் தீவிரமாக இருக்கிறது. இதற்கான உள்கட்டமைப்பு மற்றும் கல்வியிலும் அதிக முதலீடு செய்து வருகிறது என்றாா் அவா். காமன்வெல்த் விளையாட்டு-2022 போட்டிகளில் குத்துச்சண்டையில் அமித் பங்கல் தங்கப் பதக்கம் வென்றாா். பா்மிங்காம் விளையாட்டுப் போட்டியில் பூஜா கெலாட் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றாா். பூஜா கெலாட் தேசிய அளவில் தில்லியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறாா். மேலும், மாநிலத்தின் விளையாட்டு வசதிகளிலும் பயிற்சி பெற்று வருகிறாா்.
இந்தியாவிற்கு வெற்றியையும் பெருமையையும் கொண்டு வந்ததற்காக கெலாட் மற்றும் பங்கல் ஆகியோருக்கு கேஜரிவால் வாழ்த்து தெரிவித்தாா். அத்துடன், எதிா்காலத்தில் நாட்டிற்காக இதுபோன்ற பல பதக்கங்களை வெல்வதற்கு அவா்களுக்கு அதிா்ஷ்டம் கைகூடுமாறும் வாழ்த்தினாா்.