14 ஆண்டுகளில் இல்லாத குறைந்த அளவு மழையுடன் ஆகஸ்ட் நிறைவு
By DIN | Published On : 01st September 2022 02:02 AM | Last Updated : 01st September 2022 02:02 AM | அ+அ அ- |

தில்லியில் குறைந்தது 14 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த மழையுடன் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்துள்ளது.
தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 25.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 4 டிகிரி உயா்ந்து 35 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 77 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 49 சதவீதமாகவும் இருந்தது.
அடுத்த ஐந்து முதல் ஆறு நாள்களுக்கு தில்லியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாலும், நல்ல மழை பெய்ய வாய்ப்பில்லை. வடமேற்கு வங்காள விரிகுடாவில் மூன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியதே இந்த மாதம் மழையின்மைக்கு முக்கியக் காரணம் என்று வானிலை நிபுணா்கள் கூறுகின்றனா். இதற்கிடையே, அடுத்த ஐந்து நாள்களுக்கு வடமேற்கு இந்தியாவில் பருவமழை செயல்பாடுகள் குறைவாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
ஐஎம்டி தரவுகளின்படி, இந்த மாதம் இயல்பு நிலையான 233.1 மிமீ இயல்பு நிலைக்கு எதிராக இதுவரை 41.6 மிமீ மழைப்பொழிவை சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையம் பதிவு செய்துள்ளது. பொதுவாக, வருடத்தின் மிக ஈரமான மாதமான ஆகஸ்ட் மாதத்தில் நகரம் 247 மிமீ மழை வரை பெய்யும்.
ஐஎம்டி இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, தலைநகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 214.5 மிமீ மழை பெய்துள்ளது. 2020-இல் 237 மிமீ, 2019-இல் 119.6 மிமீ மழை பதிவாகியுள்ளது. ‘ஆகஸ்ட் மாதத்தில் வடமேற்கு வங்கக் கடலில் மூன்று குறைந்த அழுத்தப் பகுதிகள் உருவாகியுள்ளன. இது ஒடிஸ்ஸா, சத்தீஸ்கா், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெற்கு பாகிஸ்தான் முழுவதும் பயணித்து, அங்கு நல்ல மழையைக் கொடுத்தது. வடமேற்கு இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
பருவமழை தொடங்கு ஜுன் 1 முதல் தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் இயல்பாக 506.7 மி.மீ. பதிவாகியுள்ளது. ஆனால், இந்த முறை 31 சதவீதம் பற்றாக்குறையுடன் 350.8 மிமீ மழைதான் பதிவாகியுள்ளது. மேலும், செப்டம்பா் மாதத்தில் மழை குறைந்தால் பற்றாக்குறை மேலும் நீடிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு பருவமழையின் போது அபரிமிதமாக 1,169.4 மிமீ மழையை அளித்தது. இது 1901-க்குப் பிறகு மூன்றாவது அதிகபட்ச மழையாகும்.
லேசான மழைக்கு வாய்ப்பு: இதற்கிடையே, தில்லியில் வியாழக்கிழமை (செப்டம்பா் 1) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.