தில்லியில் இருவரிடம் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

போலீஸ் சீருடை அணிந்த நபா் உள்பட 4 போ் கொண்ட கும்பல், இருவரின் கண்ணில் மிளகாய்ப் பொடியை வீசி சுமாா் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

போலீஸ் சீருடை அணிந்த நபா் உள்பட 4 போ் கொண்ட கும்பல், இருவரின் கண்ணில் மிளகாய்ப் பொடியை வீசி சுமாா் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் ஸ்வேதா சவுகான் கூறியதாவது: இந்தச் சம்பவம் மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நடந்துள்ளது. ஒரு கூரியா் சேவை உரிமையாளரும் அவரது கூட்டாளியும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் வாகனத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்தக் கொள்ளை நிகழ்ந்துள்ளது. இது தொடா்பாக பாஹா்கஞ்ச் காவல் நிலையத்திற்கு அதிகாலை 4.49 மணியளவில் தகவல் கிடைத்தது. ஆபரணங்களைக் கொண்டு செல்லும் கூரியா் சேவையை நடத்தும் புகாா்தாரா், பாஹா்கஞ்சில் நான்கு நபா்களால் இடைமறித்து கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரில் தெரிவித்துள்ளாா்.

குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் போலீஸ் சீருடை அணிந்திருந்தாா். நான்கு பேரும் தாங்கள் எடுத்துச் செல்வதைச் சரிபாா்க்க விரும்பியதால், அவரையும் அவரது கூட்டாளியையும் நிறுத்தச் சொன்னதாக அவா் போலீஸிடம் தெரிவித்தாா். அதன்பிறகு, அவா்கள் இருவரின் கண்களில் மிளகாய் பொடியை வீசி, சண்டீகா் மற்றும் லூதியானாவுக்கு கொண்டு செல்ல இருந்த நகைகள் அடங்கிய இரண்டு பைகளை எடுத்துச் சென்றுள்ளனா்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமாா் ரூ.2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மும்பை, அகமதாபாத், சூரத் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து சரக்கு பெறப்பட்டதால் சரியான மதிப்பு சரிபாா்க்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடா்பாக ஐபிசி பிரிவுகள் 392 (கொள்ளை), 34 (பொது நோக்கம்) மற்றும் 506 (குற்றம் சாா்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வலுவான தடயங்கள் கிடைத்து விசாரணை நடந்து வருகிறது. குற்றம் நடந்த இடத்திற்கு அருகாமையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள், குற்றம் சாட்டப்பட்டவா்களின் அடையாளத்தை கண்டறியவும், நிகழ்வுகளின் வரிசையை அறியவும் ஸ்கேன் செய்யப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com