தில்லியில் காணொலிப் பள்ளியை தொடக்கினார் கேஜரிவால்: நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் சேரலாம்
By நமது நிருபா் | Published On : 01st September 2022 02:08 AM | Last Updated : 01st September 2022 03:57 AM | அ+அ அ- |

நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில், காணொலிப் பள்ளியை (விர்ச்சுவல் ஸ்கூல் }டிஎம்விஎஸ்) தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
இதுகுறித்து முதல்வர் கேஜரிவால் காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள 13 முதல் 18 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி அளிப்பதற்கான சேர்க்கை இந்த காணொலிப் பள்ளியின் மூலம் தொடங்கப்படும். மாணவர்கள் திறன் சார்ந்த பயிற்சியுடன் நீட், க்யூட் மற்றும் ஜேஇஇ போன்ற நுழைவு தேர்வுகளுக்காக பயிற்சியும் வல்லுநர்கள் மூலம் அளிக்கப்படும். நாட்டிலேயே முதல் முதலாக இந்தக் காணொலிப் பள்ளி அமைக்கப்பட்டு இருப்பது கல்வித் துறையில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதை நிரூபிக்கும். பள்ளிகள் வெகு தொலைவில் இருப்பது, இதர தடைகள் போன்ற பல பிரச்னைகளால் பள்ளிக்கு மாணவர்கள் பலர் செல்ல முடியாத நிலை உள்ளது.
பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வெளியில் அனுப்ப விரும்பாததால் தங்களது மகள்களுக்கு படிப்பை அளிக்க முடியவில்லை. அவர்கள் கல்வியைப் பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்தக் காணொலிப் பள்ளியைத் தொடங்கி இருக்கிறோம். கரோனா நோய்த்தொற்று காரணமாக அவசியமாகியுள்ள காணொலி வகுப்புகள் மூலம் இந்தப் பள்ளி ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப் பள்ளியின் வகுப்புகள் இணையதளத்தில் நடத்தப்படும். பதிவு செய்யப்பட்ட வகுப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்தக் காணொலிப் பள்ளி தில்லி பள்ளிக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்படும். அங்கீகாரமுள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 13 வயது முதல் 18 வயதுடைய மாணவர்கள் இந்தக் காணொலிப் பள்ளியில் சேர்வதற்கு ஈஙயந.ஹஸ்ரீ.ண்ய் எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இங்கு இலவச கல்வி அளிக்கப்படும். நேரலை அல்லாமல் பதிவேற்றப்பட்ட வகுப்புகளும் மாணவர்களுக்கு அளிக்கப்படும். ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர்கள் தில்லிக்கு வந்து தேர்வு எழுதினால் போதும் என்றார் முதல்வர் கேஜரிவால்.
திறந்தநிலை பள்ளி மறுப்பு: நாட்டிலேயே முதல் முறையாக காணொலிப் பள்ளியை தில்லி அரசுதான் தொடங்கியது என்று முதல்வர் கேஜரிவால் கூறியதற்கு தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் (என்ஐஓஎஸ்) மறுத்துள்ளது.
காணொலிப் பள்ளியை கடந்த ஆண்டு மத்திய அரசுதான் முதல்முறையாகத் திறந்தது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...