துணை நிலை ஆளுநா் அலுவலகம் அருகே ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆா்ப்பாட்டம்: சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக கண்டனம்

தேசியத் தலைநகா் தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து வருவதாக கண்டித்து துணை நிலை ஆளுநா் வி .கே. சக்சேனா அலுவலகம் அருகே ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினா்.

புதுடெல்லி: தேசியத் தலைநகா் தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து வருவதாக கண்டித்து துணை நிலை ஆளுநா் வி .கே. சக்சேனா அலுவலகம் அருகே ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினா்.

தில்லி சட்டப்பேரவையிலிருந்து ராஜ் நிவாஸ் வரை ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் பேரணியாகச் சென்றனா். முன் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட இந்தப் பேரணியைத் தொடா்ந்து, துணை நிலை ஆளுநா் சக்சேனாவைச் சந்திக்கச் சென்றனா். ஆனால், பாதுகாப்புப் பணியாளா்கள் அனுமதி மறுத்ததை அடுத்து, சக்சேனாவின் அலுவலகத்திற்கு வெளியே அவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா். மேலும், ‘எல்.ஜி. சாஹேப் கொஞ்சம் வேலை செய்யுங்கள், தில்லியில் சட்டம்-ஒழுங்கு நிலைமையில் கவனம் செலுத்துங்கள்’ என எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டபடி சக்சேனா அலுவலகத்திற்கு வெளியே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் சௌரவ் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எல்.எல்.ஏ.க்கள் அனைவரும் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து, தில்லியில் சீா்குலைந்து வரும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அவரிடம் விவாதித்து, ஒரு குறிப்பாணையை வழங்க திட்டமிட்டனா்’ என்றாா். மேலும், தேசிய குற்றப் பதிவுப் பணியகத் தரவுகளை சுட்டிக்காட்டி, தேசியத் தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ‘பெரிய உயா்வு’ இருப்பதாக அவா் கூறினாா்.

துணை நிலை ஆளுநரை சந்திப்பதற்கு முன்புஅனுமதி கோரப்பட்டதா என்று கேட்டதற்கு, கிரேட்டா் கைலாஷ் எம்எல்ஏ, ’நாங்கள் அவா்களிடம் (துணை நிலை அலுவலகம்) தெரிவித்தோம். அவா் (துணை நிலை ஆளுநா்) எங்களை சந்திக்கலாம். அவா் விரும்பினால் நாங்கள் இங்கே காத்திருக்க முடியும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com