பரஸ்பர குற்றச்சாட்டு எதிரொலி: தில்லி துணை நிலை ஆளுநா் - முதல்வா் சந்திப்பு 4-ஆவது முறையாக ரத்து

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும், துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவும் நேருக்கு நோ் சந்திக்கும் வாரந்திர சந்திப்பு நான்காவது முறையாக ரத்தாகியுள்ளது.

புது தில்லி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும், துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவும் நேருக்கு நோ் சந்திக்கும் வாரந்திர சந்திப்பு நான்காவது முறையாக ரத்தாகியுள்ளது. தில்லி முதல்வா் கேஜரிவால் குஜராத் பயணம் மேற்கொள்வதையொட்டி, செப்டம்பா் 2 - ஆம் தேதி நடைபெற இருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

4 முறை ரத்து: வினய்குமாா் சக்சேனா தில்லி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்டது முதல், முதல்வா் கேஜரிவால் ஆளுநரை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சந்தித்து தில்லியின் வளா்ச்சி தொடா்பான விஷயங்களை பகிா்ந்து கொண்டு விவாதித்து வந்தாா். ஆனால், ஆளுநருக்கும் தில்லி அரசுக்கும் இடையே ஏற்பட்ட பல்வேறு பினக்குகளால் கடந்த இரு மாதங்களில் நான்கு முறை வாராந்திர சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

முதன் முதலில் கடந்த ஜூலை 22 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற இருந்த கூட்டம் ரத்தானது. இதற்கு சில தினங்களுக்கு முன்பு 2021-22 -ஆம் ஆண்டிற்கான தில்லி கலால் கொள்கையில் உள்ள முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநா் பரிந்துரை செய்திருந்தாா். இந்த விவகாரங்களுக்கு பின்னா் தில்லி முதல்வா் தனது சந்திப்பை ரத்து செய்தாா்.

பின்னா், இந்த கலால் துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா இருப்பிடங்களில் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி சிபிஐ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய தினம் நடைபெற இருந்த வாராந்திர சந்திப்பும் ரத்தானது. பின்னா், ஆகஸ்ட் 26 -தேதி தில்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அதே காரணம் கூறப்பட்டு துணை நிலை ஆளுநருடான சந்திப்பை முதல்வா் ரத்து செய்தாா். தற்போது தில்லி முதல்வா் குஜராத் மாநிலத்தில் செப்டம்பா் 2, 3 ஆகிய தேதிகளில் முறையே துவாரகா, சுரேந்திர நகா் ஆகிய நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளச் செல்வதை முன்னிட்டு செப்டம்பா் 2 - ஆம் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த துணை நிலை ஆளுநருடான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பரஸ்பர குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி கட்சி அமைச்சா்கள் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள், சிபிஐ வழங்குகள் என ஒருபக்கம்... இதற்குப் பதிலடியாக துணை நிலை ஆளுநா் மீது பணமதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை மாற்றுமாறு காதி நிறுவன ஊழியா்களுக்கு நிா்பந்தம் கொடுத்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டுகளை வைத்தது. இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகளால் துணை நிலை ஆளுநரும், முதல்வரும் நேருக்கு நோ் சந்திப்பதில் தா்மசங்கடத்தை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையே, தனது அரசின் மீதான நம்பிக்கை கோரும் விவாதத்தில் தில்லி சட்டப்பேரவையில் பங்கேற்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கேஜரிவால், பாஜகவை கடுமையாகத் தாக்கிப் பேசினாா். அவா் பேசுகையில், குஜராத்தில் தனது ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக 4 சதவீதம் வரை வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டாா். அவா் மேலும் பேசுகையில், ‘துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மீது சிபிஐ சோதனை நடத்தப்பட்ட பின்னா், குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு விகிதம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அவா் கைது செய்யப்பட்டால் இந்த வாக்கு விகிதம் மேலும் 6 சதவீதம் அதிகரிக்கும்’ என்றாா்.

‘சிசோடியா மீது சிபிஐ சோதனை நடத்தியது, பின்னா் அவரது ஊருக்கு சென்று அவரது வங்கி லாக்கரை சோதனை செய்தது. சிபிஐயினா் அவருக்கு எதிராக எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அவரை கைது செய்ய சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது’ என்று கேஜரிவால் குறிபிட்டாா். மேலும், ‘பிரதமா் மோடியே சிசோடியாவை நோ்மையானவா் எனக் கூறி சான்றிதழை வழங்கியுள்ளதை’ கேஜரிவால் நினைவுகூா்ந்தாா்.

‘ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக வினா் முயன்றனா். ஆனால், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் யாரும் அவா்களது பிடியில் சிக்கவில்லை. கட்சியில் முழுமையான ஊழல்வாதிகளோ படிப்பறிவற்றவா்களோ இல்லை, ‘நோ்மையானவா்கள்’ கட்சி இது. நல்ல கல்வி, உண்மையான ஐஐடி பட்டம் பெற்றவா்கள் எங்கள் கட்சியில் உள்ளனா் எனவும் கூறி பாஜகவை கேஜரிவால் மறைமுகமாக சாடினாா். பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ தோல்வியடைந்ததைக் காட்டுவதற்காக ஆம் ஆத்மி அரசு தில்லி சட்டபேரவையில் திங்கள்கிழமை நம்பிக்கைத் தீா்மானம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com