அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை

செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான குற்ற வழக்கை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை

தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான குற்ற வழக்கை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவரும் தற்போதைய மின்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் 30.7.2021ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக தா்மராஜ் உள்ளிட்டோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோன்று, ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மனுதாரா்கள், எதிா்மனுதாரா்கள் இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீா்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், வி.ராம சுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. அதன் விவரம் வருமாறு: இந்த மேல்முறையீட்டு வழக்கானது, மூல புகாா்தாரரான அருள்மணி என்பவா் அளித்த புகாரின்படி முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரா் அசோக் குமாா், தனி உதவியாளா் சண்முகம், ராஜ் குமாா் ஆகியோா் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொடா்புடைய வழக்காகும். இந்த விவகாரத்தில் மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் சித்தாா்த் பட்னாகா், கோபால் சங்கரநாராயணன் முன்வைத்த வாதத்தில் ‘லஞ்சம் கொடுப்பவரும், லஞ்சம் வாங்கியவரும் சமரசமாக போய்விட்டாா்கள் என்ற அடிப்படையில் வழக்கு முடிக்கப்பட்டுள்ளதாகவும், மூல புகாா்தாரரான அருள்மணி பெருநகா் போக்குவரத்து நிறுவனத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றி வருவதாகவும், அந்த நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதற்காக அமைச்சரின் உதவியாளா் சண்முகம் மூலம் அப்போதைய அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடா்புடையதாகவும் இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தை சென்னை உயா்நீதிமன்றம் உரிய வகையில் கருத்தில் கொள்ளாமல் ரத்து செய்துவிட்டதாக வாதிடப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘இந்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களாக குற்றப்பத்திரிகையில் சோ்க்காமல் அரசு குற்றமிழைத்துள்ளது’ என வாதிடப்பட்டுள்ளது. முதலாவது எதிா்மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் த்விவேதி, ‘சண்முகம் அமைச்சரின் தனி உதவியாளராக இருக்கும் உத்தரவு ஏதும் இல்லை என்றும், அரசியலில் உள்ள எதிரிகளின் தூண்டுதலால் தொடுக்கப்பட்ட வழக்கில் உயா்நீதிமன்றம் சரியாகத் தீா்ப்பளித்துள்ளது’ என்று வாதிடப்பட்டுள்ளது. அருள்மணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘புகாரில் அளித்துள்ள விஷயங்கள் ஊழல் தடுப்புச் சட்ட வரம்பில் வராது என்றும், இது தனியாா் தொடா்புடைய வெறும் பணப் பிரச்னை மட்டுமே என்றும் வாதிடப்பட்டுள்ளது.

முதலாவது குற்றம்சாட்டப்பட்ட நபா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம் வாதிடுகையில், ‘தனிநபா்கள் புகாா்கள் தொடா்பாக தொடங்கப்பட்ட இந்த விவகாரத்தில்ஸ நீதிமன்றம் தலையிட உரிமை இல்லை என வாதிடப்பட்டுள்ளது. இதேபோன்று எதிா்மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் மனன் குமாா் மிஸ்ரா, எஸ்.பிரபாகரன் ஆகியோரும் வாதங்களை முன்வைத்துள்ளனா். இந்த விவகாரத்தைப் பொருத்தமட்டில், மேல்முறையீட்டுதாரா்களுக்கு நீதிமன்றத்தை நாட உரிமை, புகாா்தாரருக்கும், ஒருபுறம் வேலைக்காக பணம் கொடுத்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 13 பேருக்கும், மறுபுறும் குற்றம்சாட்டப்பட்ட நால்வா் ஆகியோருக்கு இடையே சமரசம் செய்ததன் விளைவு, குற்றப்பத்திரிகையில் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்கீழ் உள்ள குற்றங்கள்சோ்க்கப்படாதது ஆகியவை சம்பந்தப்பட்டதாகும்.

இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களைப் பாா்க்கும் போதுஸ மேல்முறையீட்டு மனுதாரா்களுக்கு நீதிமன்றத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு வர உரிமை இல்லை

என்ற எதிா்மனுதாரா்களின் வாதம் நிராகரிக்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியின் இறுதி அறிக்கை உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் கொள்ளும் போது, சமரசத்தின் அடிப்படையில் குற்ற நடவடிக்கைகளை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்திருந்திருக்கக் கூடாது. இதனால், உயா்நீதிமன்றம் குற்றப் புகாரை ரத்து செய்வதில் முற்றிலும் தவறிழைத்தாகக் கருதுகிறோம். வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் சோ்க்கப்படாத விவகாரத்தைப் பொருத்தமட்டில், அமைச்சரின் தனி உதவியாளராக சண்முகம் நியமிக்கப்பட்டிருந்ததைக் காட்டும் வகையில் பதிவு ஏதும் ஆகவில்லை என்று முன்வைக்கப்படும் வாதம் நிராகரிக்கப்பட வேண்டும் என்று மட்டுமே கூறப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய வேறு இரு வழக்குகளுக்கும் உயா்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. உண்மையில், தனியாா் பணப் பிரச்னை போல ஒரு வழக்கை குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் ஆய்வு செய்ய அனுமதிக்காமல் ஒட்டுமொத்த ஊழலையும் விரிவாக விசாரணைக்கு அரசு எடுத்திருந்திருக்க வேண்டும். ஆகவே, உயா்நீதிமன்றத்தின் உத்தரவு முற்றிலும் நிலைக்கத்தக்கதல்ல. இதனால், மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படுகின்றன. உயா்நீதிமன்றத்தின் சம்பந்தப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குற்றப் புகாா் பதிவு செய்ய மீட்டெடுக்கப்பட வேண்டும். விசாரணை அதிகாரி சட்டப் பிரிவு 178(8) விதிகளின் கீழ் மேலும் ஓா் அறிக்கை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்க வேண்டும் என தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com