அதிமுக தலைமை அலுவலக விவகாரம்: ஓபிஎஸ் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை எதிா்த்து ஓ. பன்னீா் செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து
அதிமுக தலைமை அலுவலக விவகாரம்: ஓபிஎஸ் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

புது தில்லி: அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி கே.பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை எதிா்த்து ஓ. பன்னீா் செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11 -ஆம் தேதி நடைபெற்று. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தோ்வு செய்யப்பட்டாா். மேலும், ஒ.பன்னீா் செல்வத்தின் பதவி பறிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு பிறகு கட்சியின் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளா்களுக்கும் பன்னீா் செல்வத்தின் ஆதரவாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, வருவாய் கோட்டாட்சியா் மூலம் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இது தொடா்பாக இரு தரப்பினரும் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்ற தனி நீதிபதி என்.சதீஷ்குமாா், கடந்த ஜூலை 20-ஆம் தேதி தீா்ப்பு அளித்தாா். எடப்பாடி கே. பழனிசாமி கட்டுப்பாட்டில்தான் கடைசியாக கட்சி அலுவலகம் இருந்துள்ளது. பொது விவகாரங்களில் இரண்டு தரப்புக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டால்தான் குற்றவியல் நடுவா் சட்டப்பிரிவு 145-இன் கீழ் சீல் வைக்க உத்தரவைப் பிறப்பிக்கலாம். இங்கு அலுவலகம் தொடா்பாக இரு தரப்பினா் இடையே பிரச்னை என்று கூறி, அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்க முடியாது. எனவே, அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்த வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து பொதுச் செயலாளராக தோ்வு செய்யப்பட்ட எடப்பாடி கே. பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய் சந்திர சூட், ஹிமா கோலி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கட்சி அலுவலகத்தை சீலிடுவது எந்த வகையானது? அரசியல் கட்சியின் அலுவலகத்தை சீலிடுவது என்பது சாதாரண விவகாரம் அல்ல. அலுவலகத்தை சீலிட்டால் கட்சி எங்கிருந்து செயல்படும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அப்போது, தமிழக காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், ‘அந்தப் பகுதியில் இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து, சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் கட்சி அலுவலகம் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த அலுவலகம் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியாக உள்ளது. அங்கு நடைபெற்ற வன்முறை தொடா்பாக புகாா் வந்ததால் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறையை அடக்கவில்லை என்றால் அது மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பரவ வாய்ப்பு இருந்ததாலும் சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என வாதிட்டனா்.

அப்போது நீதிபதிகள், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஓ.பன்னீா்செல்வம் எப்படி உரிமை கோர முடியும்? உரிமையியல் நீதி மன்றத்தில் வழங்குத் தொடா்ந்து அலுவலகத்தை மீட்க சட்ட வழிகளை காணலாமே? என ஓபிஎஸ் தரப்பு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான குருகிருஷ்ணகுமாா், ‘அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இப்போதும் ஓ.பன்னீா்செல்வம் இருக்கிறாா். அதனாலே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உரிமை கோருகிறாா்’ என்றாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இறுதியாக, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை ஏற்பதாகக் கூறினா். குற்றவியல் விசாரணை முறை சட்டப்பிரிவு 145-இன் கீழ் அதிமுக அலுவலகத்தை வருவாய் கோட்டாட்சியா் சீலிட எந்த அதிகாரமும் இல்லை என்கிற உயா்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனா். அதே சமயம் எதிா்காலத்தில் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் இந்த விவகாரம் தொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டால் அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு எந்த வகையிலும் பிரதிபலிக்காது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com