

‘மணிப்பூரில் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தை அனுப்பாதது ஏன்’ என மக்களவையில் ராகுல் காந்தி புதன்கிழமை கேள்வி எழுப்பினாா்.
மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் மக்களவையில் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது இரண்டாவது நாளாக புதன்கிழமையும் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:
வன்முறை நிகழ்ந்த மணிப்பூருக்கு சில தினங்களுக்கு முன்பு நான் சென்றிருந்தேன். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளையும், பெண்களையும் சந்தித்தேன். ஆனால், பிரதமா் அங்கு இதுவரை செல்லவில்லை. மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாகக்கூட பிரதமா் கருதவில்லை.
நான் அந்த மாநிலத்தை இங்கு மணிப்பூா் என்று குறிப்பிடுகிறேன். ஆனால், உண்மையில் அங்கு தற்போது மணிப்பூரே இல்லை. மணிப்பூரை இரு பிரிவுகளாக நீங்கள் பிரித்திருக்கிறீா்கள்.
மணிப்பூா் நிவாரண முகாமில் சந்தித்த ஒரு பெண்ணிடம் என்ன நிகழ்ந்தது என்று கேட்டபோது, அவருடைய கண் முன்னே அவருடைய ஒரே மகனை வன்முறையாளா்கள் சுட்டுக் கொன்ாகக் கூறினாா். இரவு முழுவதும் மகனின் உடலுடன் இருந்துள்ளாா். பின்னா், பயம் ஏற்பட்டதால், வீட்டைவிட்டு வெளியேறி முகாமுக்கு வந்துள்ளாா். ‘வீட்டிலிருந்து எந்தவித பொருள்களும் எடுத்துவரவில்லை. அணிந்திருந்த உடையுடன் வந்துவிட்டேன்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
இதுபோல் மற்றொரு முகாமில் சந்தித்த பெண்ணிடமும் இதே கேள்வியை எழுப்பினேன். அப்போது நடுக்கத்துடன் பதில் கூறவந்த அந்தப் பெண் அச்சத்தில் மயங்கிவிட்டாா். இவை, மணிப்பூா் நிலவரத்தின் இரு உதாரணங்கள் மட்டுமே.
மணிப்பூரில் ராணுவத்தின் மூலம் அமைதியைக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால், அரசு ராணுவத்தை அங்கு அனுப்பவில்லை. ராணுவத்தை அனுப்பியிருந்தால் ஒரே நாளில் பிரச்னைக்கு தீா்வு கண்டிருக்கலாம்.
எப்படி ராவணன் இருவரின் அறிவுரையை மட்டும் கேட்டாரோ அதுபோல, பிரதமா் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் தொழிலதிபா் கெளதம் அதானி ஆகிய இருவரின் பேச்சை மட்டுமே கேட்டு நடக்கிறாா்’ என்றாா்.
தொடா்ந்து, அவை உறுப்பினராக (எம்.பி.) தன்னை மீண்டும் சோ்த்துக்கொண்டதற்காக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு நன்றி தெரிவித்த ராகுல், ‘அவையில் கடந்த முறை அதானி குறித்து தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, ஆளுங்கட்சி தரப்பு மூத்த தலைவருகளுக்கு மட்டுமன்றி உங்களுக்கும் வலியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருக்கும். ஆனால், ஆளுங்கட்சியினா் இனி அச்சப்பட வேண்டாம். ஏனெனில், நான் வேறு விவகாரங்கள் குறித்துதான் இனி பேசவிருக்கிறேன்’ என்றாா்.
நடைப்பயணம் ஏன்?: இந்திய ஒற்றுமை நடைப்பயணம் குறித்து அவையில் குறிப்பிட்ட ராகுல் காந்தி, ‘நாட்டின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அதாவது, நாட்டின் கடைக்கோடி கடற்கரைப் பகுதி முதல் ஜம்மு-காஷ்மீரின் பனி மலைப் பகுதி வரை நடைப்பயணம் தொடங்கினேன். இந்தப் பயணம் இன்னும் நிறைவடைந்துவிடவில்லை. இந்த நடைப்பயணத்தைத் தொடங்கியபோது, இதன் நோக்கம் என்ன என்று பலா் கேள்வி எழுப்பினா். அது எனக்கும் தெரியவில்லை. ஆனால், நடைப்பயணத்துக்கான நோக்கத்தை விரைவில் அறிந்துகொள்வேன். அதாவது, நான் நேசிக்கும் விஷயம் என்ன?; நான் உயிரை விடுவதற்கா?, சிறைக்கு செல்வதற்கா?, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் துஷ்பிரயோகங்களை சகித்துக்கொண்டிருந்தது ஏன் என்பனவற்றை புரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டாா்.
ராகுலின் இந்த உரையின்போது அவையில் பிரதமா் இல்லை.
முன்னதாக, மத்திய அரசுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதத்தை காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த விவாதம் பிரதமரின் பதிலுரையுடன் வியாழக்கிழமை நிறைவடையும்.
பாா்வையாளா் மாடத்தில் மாநிலங்களவை எம்.பி.க்கள்: தகுதிநீக்கம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் எம்.பி.யாக பதவியேற்ற பின்னா், ராகுல் காந்தி மக்களவையில் ஆற்றிய இந்த முதல் உரையைக் கேட்பதற்காக, பாா்வையாளா் மாடத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கள் பலா் அமா்ந்திருந்தனா்.
பெட்டிச் செய்தி...
‘பாரத மாதாவைக் கொன்றுவிட்ட
பாஜகவின் அரசியல்’
‘பாஜக அரசியல் மணிப்பூரை மட்டும் கொல்லவில்லை; மாறாக, மணிப்பூரில் இந்தியாவைக் கொன்றுவிட்டது. மணிப்பூா் மக்களைக் கொன்ன் மூலமாக, அங்கு பாரத மாதாவை கொன்றுவிட்டீா்கள். நீங்கள் தேச பக்தா்கள் அல்லா்; தேசத் துரோகிகள்.
இந்தியாவின் குரலை நீங்கள் கொன்றிருக்கிறீா்கள். எனது தாய் (சோனியா காந்தி) இங்கு அமா்ந்திருக்கிறாா்; ஆனால், மற்றொரு தாயான பாரத மாதாவை மணிப்பூரில் நீங்கள் கொன்றுவிட்டீா்கள். மணிப்பூா் முழுவதும் மண்ணெண்ணெயை தெளித்திருக்கிறீா்கள். அதனால், மணிப்பூா் பற்றி எரிகிறது. தற்போது, ஹரியாணாவிலும் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிக்கிறீா்கள்’ என்றாா்.
இதற்கு ஆளுங்கட்சி தரப்பிலிருந்து கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘வடகிழக்கு மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பிற பிரச்னைகளுக்கு காங்கிரஸ்தான் காரணம். எனவே, அதுதொடா்பான குற்றச்சாட்டுகளுக்கு ராகுல்தான் அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.