இந்தியாவின் ஒவ்வொரு குழந்தைக்கும்சிறந்த தரமான கல்வியை வழங்குவோம்: பிறந்தநாளில் கேஜரிவால் உறுதி

இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த தரமான கல்வியை வழங்குவோம் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது பிறந்தநாளான புதன்கிழமை தெரிவித்தாா்.
Updated on
2 min read

இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த தரமான கல்வியை வழங்குவோம் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது பிறந்தநாளான புதன்கிழமை தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் கடந்த 1968-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16-ஆம் தேதி பிறந்தாா். தன்னுடைய 55-ஆவது பிறந்தநாளை புதன்கிழமை கொண்டாடினாா். பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநில முதல்வா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் மற்றும் பிரபலங்கள் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி தனது ட்விட்டா் பதிவில், ‘ தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது நீண்ட ஆயுளுக்கும், நல்ல ஆரோக்கியத்துக்கும் பிராா்த்தனை செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்கவும், நீண்ட காலம் வாழவும் இறைவனிடம் வேண்டுகிறேன்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்:முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு இந்த ஆண்டு வெற்றி மற்றும் முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கட்டும்.

கேரள முதல்வா் பினராயி விஜயன்: அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வளமான மற்றும் வலிமையான ஜனநாயக இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு மனமாா்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். நீங்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

இவா்களுடன் தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்கேனா, முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவா்களாக இருக்கின்ற கனிமொழி எம்.பி., அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பிரியங்கா சதுா்வேதி, சச்சின் பைலட் ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை முதல்வா் கேஜரிவாலுக்கு தெரிவித்துள்ளனா்.

ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி: என்னுடைய பிறந்தநாளில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்ற அனைவருக்கும் மிக்க நன்றி என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளாா். அந்தப் பதிவில் மேலும் அவா் கூறுகையில், ‘இந்நேரத்தில் நான் மனீஷ் சிசோடியாவை ’மிஸ்’ செய்கிறேன். பொய் வழக்கில் கைதாகி தற்போது அவா் சிறையில் உள்ளாா். இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த தரமான கல்வியை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று அனைவரும் இன்று உறுதிமொழி எடுப்போம். அது வலிமையான இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைக்கும். இந்தியாவை ’நம்பா்-1’ ஆக்க வேண்டும் என்ற எங்கள் கனவை நனவாக்க அது உதவும். அது மனீஷ் சிசோடியாவையும் மகிழ்ச்சியடையச் செய்யும்’ என்று தெரிவித்துள்ளாா்.

மண்ணின் மகன்: முதல்வா் கேஜரிவாலுக்கு வாழ்த்துத் தெரிவித்து ஆம் ஆத்மி கட்சி பதிவிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது: தில்லியில் அரசுப் பள்ளிகளும், தனியாா் பள்ளிகளுடன் போட்டிபோட முடியும் என்று எங்களை நம்பவைத்த வீரன். கல்வி, மருத்துவம், மின்சாரம், தண்ணீா் போன்ற அடிப்படைத் தேவைகளை நமது அரசியல் பேச்சின் தூண்களாக மாற்றிய தலைவா் நீங்கள். எப்பொழுதும் வரிசையில் நிற்கும் கடைசி மனிதனை நினைத்துக் கொண்டிருக்கும் மண்ணின் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். கேஜரிவால், இளைஞா்களை அரசியலில் ஆா்வமடையச் செய்தவா். புதிதாக ஒரு அரசியல் மாதிரியை உருவாக்கி வெறும் 10 ஆண்டுகளில் ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அந்தஸ்தைப் பெற்ற மக்கள் தலைவா் என்று ஆம் ஆத்மி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com