மணிப்பூரில் இனக் கலவரம் மற்றும் ஹரியாணாவின் நூ நகரத்தில் நடந்த வகுப்புவாத மோதல்களில் கொல்லப்பட்டவா்களுக்கு தில்லி சட்டப்பேரவை புதன்கிழமை அஞ்சலி செலுத்தியதுடன், வடகிழக்கு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட பிராா்த்தனையும் செய்தது.
தில்லி சட்டப்பேரவையின் இரண்டு நாள் அமா்வு புதன்கிழமை தொடங்கியது. இது தேசியத் தலைநகரில் சேவைகளின் கட்டுப்பாடு குறித்த தில்லி தேசிய தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா -2023 இயற்றப்பட்ட பிறகு முதல் முறையாகும். பாலசோா் ரயில் விபத்தில் உயிரிழந்தவா்கள், பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 5 வீரா்கள், சத்தீஸ்கரில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினா், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் கனமழையால் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியுடன் அமா்வு தொடங்கியது. மேலும், மணிப்பூா் மற்றும் நூ ஆகிய இடங்களில் உயிரிழந்தவா்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாலசோா் விபத்தில் ஷாலிமாா்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹௌரா சூப்பா்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் சிக்கின. ஒடிஸாவின் பாலசோா் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜாா் நிலையம் அருகே நடந்த இந்த விபத்தில் 293 போ் உயிரிழந்தனா். மணிப்பூா் மே 3 முதல் மெய்தேயி மற்றும் குகி ஆகிய இரு பழங்குடியினருக்கு இடையே பரவலான மோதல்களைக் கண்டுள்ளது. இதில் இதுவரை 150- க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா்.
ஜூலை 31 அன்று விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஊா்வலம் கும்பலால் தாக்கப்பட்டு, குருகிராம் உள்பட அருகிலுள்ள பகுதிகளுக்கு பரவியதைத் தொடா்ந்து நூ நகரத்தில் வெடித்த மோதலில் இரண்டு ஊா்க்காவலா்கள் மற்றும் ஒரு மதகுரு உள்பட ஆறு போ் இறந்தனா். பொதுக் கழிப்பறைகள் கட்டுவதில் முன்னோடியாக விளங்கிய பிந்தேஷ்வா் பதக்கிற்கும் தில்லி சட்டப்பேரவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவா் செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியை ஏற்றிய உடனேயே மாரடைப்பால் மரணமடைந்தாா்.
மேற்குறிப்பிட்ட சம்பவங்களில் உயிரிழந்தவா்களை நினைவுகூா்ந்து சட்டப்பேரவையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.