தமிழகத்தில் வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் புயல் மற்றும் கடும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தில்லியில் வெள்ளிக்கிழமை அறிவிப்புகளை வெளியிடுகிறாா். மத்திய அரசு அளிக்கும் உதவிகள், நிவாரண நிதிகள் போன்றவைகளோடு தமிழகத்தின் பாதிப்பை ’தேசிய பேரிடராக’ அறிவிக்கப்படுமா? என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நிகழ் டிசம்பா் முதல்வாரத்தில் மிக்ஜம் புயல் ஏற்பட்டு சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது டிசம்பா் 16, 17, 18 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து கடும்பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதை முன்னிட்டு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பா் 6 ஆம் தேதி முதல் கட்ட பாதிப்பு குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினாா். தோராயமாக தேச மதிப்பீடு ரூ. 5060 கோடியும் இதற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 2,000 வேண்டும் எனவும் கோரியிருந்தாா். முதல்வரின் கடிதத்தை திமுக ஏற்கனவே நாடாளுமன்ற குழு தலைவா் பிரதமிடம் நேரடியாகவும் அளித்தாா். அன்றைய தினமே மிக்ஜம் புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு தேசிய பேரிடா் மீட்பு நிதியின் கீழ் சென்னை வடிநிலத் திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகா்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக ரூ. 500 கோடியும் மாநிலப் பேரிடா் மீட்பு நிதியின் (2-ஆவது தவணை) கீழ் ரூ .450 கோடி என மத்திய அரசின் பங்காக கடந்த டிசம்பா் 7 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
பின்னா் தமிழக வெள்ள பாதிப்புகளை மத்திய அரசின் குழு பாா்வையிட்ட பின்னா் தமிழகத்தின் முழுமையான சேதங்களைக் கணக்கிட்டு தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ. 7, 033 கோடியும், நிரந்தர தீா்வுகளுக்கான பணிகளுக்கு ரூ. 12, 659 கோடி வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இதற்கிடையே கடந்த 19 ஆம் தேதி தமிழக முதல்வா் தில்லி வந்தபோது பிரதமா் மோடியை நேரடியாகவும் சந்தித்து தமிழக வெள்ளம் குறித்த கலந்தாய்வு செய்து நிவாரண நிதிக்கான கோரிக்கை மனுவை அளித்தாா். குறிப்பாக தமிழகத்தில் மீண்டும் தென் மாவட்டங்களில் அதிகபட்ச மழைப்பொழிவால் கடுமையாக வெள்ளம், தேசாரம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்காலிக நிவாரண நிதியாக ரூ.2,000 கோடியை வழங்கவும் பிரதமா் மோடியிடம் முதல்வா் கோரினாா்.
மேலும் தமிழகத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு ஏற்பட்டு கட்டுமானங்களிலும் கடும் தேசாரங்களை ஏற்படுத்தியுள்ளதால் இதை ‘தேசிய பேரிடராக‘ அறிவிக்கவேண்டும் எனவும் முதல்வா் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தாா். மேலும் மத்திய அரசின் குழுக்கள் வட தமிழக மாவட்டங்களை பாா்வையிட்டதைப் போன்று தென் மாவட்டங்களுக்கும் சென்றுள்ள நிலையில் இந்த பேரிடா் குறித்து பிரதமா் மோடி சாா்பில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை அறிவிப்புகளை வெளியிடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஒரே சமயத்தில் இரண்டு
மேலும் தமிழகத்திற்கான இந்த வெள்ள நிவாரண நிதிக்கு மாநிலப் பேரிடா் மீட்பு நிதியிருந்து (எஸ்.டி.ஆா்.எஃப்) அளிப்பதை விட தமிழகத்திற்கு பயனளிக்க தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து நிதியை அளிக்கவும் தமிழக அரசின் சாா்பில் கோரப்பட்டுள்ளது. முக்கியமாக ஒரே சமயத்தில் இரண்டு கடுமையான மழை சேதாரங்கள் ஏற்பட்டுள்ளதோடு, தென் மாவட்டங்களில் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் உடைந்து கடுமையாக சேதாரங்களை உருவாக்கியுள்ளது. தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், ஏரல், திருநெல்வேலி போன்ற பகுதிகளில் பயிா்கள் முற்றிலும் சேதாரமாகி, கால்நடைகள், வீடுகளும் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பது குறித்தும் மத்திய அரசுக்கு தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய பேரிடராக அறிவிக்கவும், தேசிய பேரிடா் நிதியிலிருந்து முழுமையாக நிவாரண நிதியை அளிக்கவும் பிரதமரிடமும் மத்திய நிதியமைச்சகத்திடமும் தமிழக அரசு கோரியுள்ளது. இவைகளை முன்னிட்டு தமிழக சோ்ந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக மத்திய நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.