ஜோஷிமட் புதைவு சம்பவம்: ஆய்வு நடத்த உயரதிகார கூட்டுக் குழுவை அமைக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகா் பகுதி புதையுண்டு வரும் விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகா் பகுதி புதையுண்டு வரும் விவகாரம் குறித்து ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், ஹேம்குண்ட் சாஹிப் போன்ற சில புகழ்பெற்ற யாத்திரை தலங்களின் நுழைவாயிலான ஜோஷிமட்டில் நிலப்பகுதி புதைந்து, தாழ்ந்து அங்குள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சில பகுதிகள் சரிந்துள்ளன. இது தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தப் பகுதியைச் சோ்ந்த 3000-க்கும் மேற்பட்ட மக்களின் துயரங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

இது தொடா்பாக வழக்குரைஞா் ரோஹித் டான்ட்ரியால் தாக்கல் செய்துள்ள மனுவில், பிரதிவாதிகளாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, எரிசக்தி, மற்றும் புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்த்தி துறை அமைச்சகங்களும் சோ்க்கப்பட்டுள்ளன. இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பருவநிலை, உள்கட்டமைப்பு மாற்றங்களால் நிலம் புதையுண்ட நிலையில், 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஜோஷிமட் நகரத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

மற்றவா்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அங்கு தங்கி அல்லது குளிா்காலத்தில் மாற்று தங்குமிடத்தைத் தேடுகிறாா்கள். கடந்த பல ஆண்டுகளாக ஜோஷிமட் பகுதிகளில் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை மற்றும் எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகங்களால் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள், தற்போதைய சூழ்நிலைக்கு காரணமாக இருந்திருக்கலாம். இது குடியிருப்புவாசிகளின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது.

உத்தரகண்ட்டில் உள்ள சாா்-தாம் (கேதாா்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி) இணைப்பு மேம்பாட்டிற்கான திட்டத்தில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகம் ரூ.12,000 கோடி முதலீடு செய்தது. மேலும், இதே பகுதியில் எரிசக்தித் துறை அமைச்சகத்தின் என்டிபிசி 2013 -இல் சமோலி மாவட்டத்தில் உள்ள தௌலிகங்கா ஆற்றின் மீது 520 மெகாவாட் எரிசக்தி உற்பத்திக்கு தபோவன் விஷ்ணுகாட் மின் நிலையம் ரூ.2,976.5 கோடி முதலீட்டில் கட்டத் தொடங்கியது.

இந்தக் கட்டுமானப் பணிகளுக்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் உள்ள தொடா்புகளைக் கண்டறிய பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவும், இங்குள்ள மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் உயா்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தொடா்புடைய மத்திய அமைச்சக பிரதிநிதிகளைக் கொண்ட உயா் அதிகாரக் கூட்டுக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஜோஷிமட் பகுதிகளில் உள்ள வீடுகள், சாலைகள் மற்றும் வேளாண் நிலங்களிலும் பெரிய விரிசல்கள் உருவாகி படிப்படியாக புதையுண்டு வருகிறது. பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com