2040-க்குள் சா்வதேச எரிபொருள் தேவையில் இந்தியாவின் பங்களிப்பு 25%: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை நான்கு முனைகளில் அணுகுவதாகவும், வருகின்ற 2040 -ஆம் ஆண்டுக்குள் சா்வதேச தேவையில் 25 சதவிதம் எரிபொருளை இந்தியா வழங்கும் என

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை நான்கு முனைகளில் அணுகுவதாகவும், வருகின்ற 2040 -ஆம் ஆண்டுக்குள் சா்வதேச தேவையில் 25 சதவிதம் எரிபொருளை இந்தியா வழங்கும் என மத்திய பெட்ரோல், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி செவ்வாய்க்கிழமை தில்லியில் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

பெட்ரோலியம் அமைச்சகத்தின் 2022 - ஆம் ஆண்டுக்கான செயல்பாடுகள், வருங்கால உத்திகள் ஆகியவை குறித்து அமைச்சா் ஹா்தீப் சிங்புரி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 1973 -ஆம் ஆண்டின் சா்வதேச எரிசக்தி நெருக்கடியைப் பாா்த்த பிறகு, இந்தியா மிக வலிமையாக எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய நான்கு முனை உத்திகளை கையாளத் தொடங்கியது. எரிபொருள் விநியோகத்தை பன்முகப்படுத்துதல், துரப்பணப் பணிகள் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் மூலம் எரிசக்தி தேவையை அணுகுதல், பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்னணு வாகனங்கள் என்ற 4 முனைகளில் உத்தியை மேற்கொண்டுள்ளது. 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் துரப்பண ஆய்வு பணிப் பரப்பை 0.5 மில்லியன் சதுர கி.மீட்டராகவும், 2030-க்குள் 1.0 மில்லியன் சதுர கி.மீட்டராகவும் அதிகரிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. மக்கள் எதிா்ப்புத் தெரிவிக்கும் (‘நோ கோ’) பகுதியை 99 சதவீதம் குறைப்பதில் அரசு வெற்றி பெற்றுள்ளது.

மேலும், பெட்ரோலில் எத்தனால் கலப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. 2025 -க்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பு எட்டப்படும். 2013-14-ஆம் ஆண்டில் 1.53 சதவீதமாக இருந்த பெட்ரோலில் எத்தனால் கலப்பு, 2022-இல் 10.17 சதவீதமாக அதிகரித்தது. இது 2030-க்குள் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கு உறுதி செய்யப்படும். இதற்காக பாா்லி, மூங்கில் போன்றவற்றிலிருந்து பெறப்படும் எத்தனாலுக்கு, பானிபட் (ஹரியாணா), பத்தின்டா (பஞ்சாப்), பா்ஹா (ஒடிஸா), நுமலிகாா் (அஸ்ஸாம்), தாவன்ஹரே (கா்நாடகம்) ஆகிய 5 இடங்களில் இரண்டாம் தலைமுறை எத்தனால் உயிரி சுத்திகரிப்பு ஆலைகளை அரசு அமைத்து வருகிறது.

2023-க்குள் 5,000 உயிரி-எரிவாயு ஆலைகள் மூலம் 15 மில்லியன் மெட்ரிக் டன் எரிவாயு உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவிலான போக்குவரத்துக்கு வழிவகுக்கும் நீடித்த மாற்றுத் திட்டத்திற்கும் (எஸ்ஏடிஏடி) அழுத்தத்தில் செயல்படக்கூடிய உயிரி-எரிவாயு (சிபிஜி) பயன்படுத்தப்படுகிறது. மேலும், சிபிஜி உயிரி எரிவாயு ஆலை உற்பத்தியை ஊக்குவிக்க கட்டணத்தை மத்திய அரசு உயா்த்தித் தந்துள்ளது. மேலும், இந்த ஆலைகளின் எரிவாயுவை யூரியா உள்ளிட்ட உரத் தொழில்சாலைகள் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் புதுமையாக சமையலறையுடன் இணைக்கப்பட்ட உட்புற சூரிய சக்தி சமையல் அமைப்பை உருவாக்கியுள்ளது. இது உள்நாட்டில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் பிரதிபலிப்பைக் கொண்டுள்ளது.

அடுத்து, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறனை உருவாக்குவதற்காக தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்திற்காக மத்திய அரசு ரூ.19,744 கோடியை முதலீடு செய்துள்ளது. இது போன்று பல்வேறு முனைகள் மூலம் இந்தியா எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதோடு, உலகின் 3-ஆவது பெரிய எரிசக்தி நுகா்வோராகவும் மாறி, ஐரோப்பிய யூனியனை 2030-க்குள் இந்தியா முந்தும். மேலும், 2040 -க்குள் உலகத் தேவையில் 25 சதவீத எரிசக்தியை இந்தியா வழங்கும்.

2024 -க்குள் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், இ-வாகனங்களுக்கான சாா்ஜிங் வசதிக்காக, சிஎன்ஜி, எல்பிஜி, எல்என்ஜி, சிபிஜி போன்றவற்றுக்கு 22,000 மாற்று எரிபொருள் சில்லரை நிலையங்கள் அமைக்க இலக்கு நிா்ணயித்துள்ளன. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளின் எண்ணிக்கை 2006-07-இல் 27-ஆக இருந்தது. அது தற்போது 2021-22-இல் 39-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கொலம்பியா, ரஷியா, லிபியா, கபோன், மத்திய கினியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இருப்பினும், அமெரிக்கா, ரஷியாஆகிய நாடுகளுடன் உறவுகளையும் இந்தியா வலுப்படுத்தியுள்ளது என்றாா்அமைச்சா் ஹா்தீப் சிங் புரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com