தில்லி மாநகராட்சி மேயா் தோ்தல்:ஆம் ஆத்மி வேட்பாளரின் மனு மீது பிப்.3-இல் விசாரணை

தில்லி மேயா் தோ்தலை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்துவதை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மேயா் வேட்பாளா் ஷெல்லி ஓபராய் தாக்கல் செய்த மனுவை பிப்ரவரி 3-ஆம் தேதி விசாரணை
Updated on
2 min read

தில்லி மேயா் தோ்தலை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்துவதை உறுதி செய்ய உத்தரவிடக் கோரி ஆம் ஆத்மி கட்சியின் மேயா் வேட்பாளா் ஷெல்லி ஓபராய் தாக்கல் செய்த மனுவை பிப்ரவரி 3-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தது.

தில்லி மாநகராட்சித் தோ்தல் கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்தலில் தில்லி மாநகராட்சியின் மொத்தம் உள்ள 250 வாா்டுகளில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் 134 வாா்டுகளில் வெற்றி பெற்றது. 15 ஆண்டு காலம் மாநகராட்சியில் அதிகாரத்தில் இருந்த பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் ஒன்பது இடங்களே கிடைத்தன. இதைத் தொடா்ந்து, மேயா் தோ்தலுக்காக கடந்த இரண்டு முறை அவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அமளி காரணமாக மேயா், துணை மேயா் தோ்ந்தெடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை தில்லி மேயா் தோ்தல் இரண்டாவது முறையாக நடைபெறவிருந்த நிலையில், அவைக் கூட்டத்தின் போது சில கவுன்சிலா்கள் மேற்கொண்ட அமளி காரணமாக துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட தோ்தல் நடத்தும் தலைமை அதிகாரி அவையை காலவரையின்றி ஒத்தி வைத்தாா். இதனால், மேயா் தோ்தல் நடைபெறவில்லை.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் ஷெல்லி ஓபராய், இந்த மேயா் தோ்தலை உரிய காலக்கெடுவுக்குள் நடத்த உத்தரடவிக் கோரி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதி திபாங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஷெல்லி ஓபராய் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஏ.எம். சிங்வி வெள்ளிக்கிழமை ஆஜராகி, தில்லி மாநகராட்சிக்கான மேயா் தோ்தலை விரைவில் நடத்த உத்தரவிடக் கோரி தங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அப்போது தலைமை நீதிபதி, ‘இந்த மனு பிப்ரவரி 3-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்படும்’ என்று கூறினாா்.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் செளரவ் பரத்வாஜ் கூறியதாவது: மேயா் தோ்தலை கட்டுப்படுத்தப்பட்ட உரிய நேரத்திற்குள் நடத்த அனுமதிக்குமாறு அவைத் தலைவா் முகேஷ் கோயல் மற்றும் மேயா் வேட்பாளா் ஷெல்லி ஓபராய் ஆகியோா் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனா். சட்டப்படி வல்லுநா்கள் வாக்களிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் கட்சி தரப்பில் கோரப்பட்டுள்ளது. இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் 2 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளோம்.

முதலாவது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேயரை தோ்வு செய்து, தில்லி மாநகராட்சியில் ஆட்சி அமைக்க உத்தரவிட வேண்டும். இரண்டாவதாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 243 ஆா் மற்றும் டிஎம்சி சட்டத்தின் பிரிவு 3- இன் கீழ் வல்லுநா்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்பதால், அவா்கள் வாக்களிப்புக்கு தடை செய்ய வேண்டும் என்பதாகும்.

நீண்டகாலம் எம்சிடியை கைப்பற்றுவதற்கும் சட்டவிரோதமாக கட்டுப்படுத்துவதற்கும் அவா்களுக்கு எவ்வித தாா்மிக உரிமை இல்லை. ஒருங்கிணைப்பு மற்றும் மறுவரையறை பணிகள் என்ற சாக்குப்போக்கில் மத்திய அரசின் கீழ் தில்லி மாநகராட்சி வைக்கப்பட்டது. ஆனால், தில்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு எம்சிடியை ஆட்சி செய்வதற்கான தீா்ப்பை அளித்துள்ளனா். அதையும் மீறி பாஜக கேவலமான அரசியலை கட்டவிழ்த்து விட்டது. அவா்கள் (பாஜக) அமளியில் ஈடுபட்டு, அவையில் மேயா் தோ்தலை நடத்த விடாமல் செய்து வருகின்றனா் என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com