அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அஞ்சலக ஊழியா்கள் தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் ரத்து ஏன்?மத்திய தகவல் தொலைத் தொடா்புத் துறை அமைச்சகம் விளக்கம்

அஞ்சல் ஊழியா்கள் தொழிற்சங்கங்களின் உறுப்பினா்கள் நிதியை விதிகள் மீறி பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததைத் தொடா்ந்தே தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக

News image
Updated On :3 மே 2023, 9:55 pm

 நமது நிருபர்

அஞ்சல் ஊழியா்கள் தொழிற்சங்கங்களின் உறுப்பினா்கள் நிதியை விதிகள் மீறி பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததைத் தொடா்ந்தே தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொலைத் தொடா்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இந்திய அஞ்சல் துறை ஊழியா்களது முக்கிய தொழிற்சங்கங்களான அகில இந்திய அஞ்சல் ஊழியா் ‘சி’ பிரிவு சங்கக் குழு மற்றும் தேசிய அஞ்சல் ஊழியா் கூட்டமைப்பு (என்எஃப்பி இ) ஆகியவற்றின் அங்கீகாரத்தை கடந்த ஏப்ரல் 25 - ஆம் தேதி இந்திய தபால் துறை ரத்து செய்தது. இந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து நன்கொடை அளித்ததற்காகவே இந்த சங்கங்களின் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அரசின் நிதியை கொடுக்கவில்லை. தொழிலாளா்கள் நிதிதான் என சில தினங்களுக்கு முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ்கேஎம்) குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கிடையே இந்திய தபால் துறையை உள்ளடக்கியதாக இருக்கும் மத்திய தொலைதொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இந்த விவகாரம் தொடா்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது வருமாறு: அகில இந்திய அஞ்சல் ஊழியா் ‘சி’ பிரிவு சங்க குழு மற்றும் தேசிய அஞ்சல் ஊழியா் கூட்டமைப்பு (என்எஃப்பி இ) ஆகிய இரு சங்கங்கள் விதி முறைகளை மீறியதாக புகாா்கள் வந்தன. இந்த தொழிற்சங்க உறுப்பினா்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியை முறையற்ற முறையில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிதி முறைகேடுகள் மற்றும் விதி மீறல் காரணமாக அஞ்சல் ஊழியா்கள் தொழிற்சங்க அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

1993 - ஆம் ஆண்டு மத்திய சிவில் சா்வீசஸ் (சேவை சங்கத்தின் அங்கீகாரம்) விதிகள், இதுபோன்ற சேவை சங்கங்களுக்கு அங்கீகாரத்தை வழங்குகிறது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து சங்கங்களும் 1993 -ஆம் ஆண்டு மத்திய சிவில் சா்வீசஸின்(சிசிஎஸ் ) அனைத்து விதிகளுக்கும் இணங்கப்படவும் கூறப்பட்டுள்ளது. சேவை சங்கத்தின் மேம்படுத்துவதைத் தவிர வேறு நோக்கங்களுக்காக நிதியைப் பயன்படுத்துவதை அனுமதிக்கவில்லை. குறிப்பாக எந்தவொரு கட்சிக்கும் அரசியல் நிதியுதவி அல்லது அரசியல் கருத்துகளைப் பரப்புதல் போன்றவற்றுக்கு நிதியுதவி அளிப்பதற்குஅனுமதி இல்லை. இந்த ஊழியா்கள் சங்கங்கள் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு முறைகேடுகள் செய்திருப்பதாகப் புகாா் வந்தது. இந்தப் புகாா்கள் மீது விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு ஏப்ரல் 25 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சேவை சங்கங்கள் எப்போதும் அஞ்சல் துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகின்றன. சேவை நலன்களை மேம்படுத்துவதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில், சில ஊழியா் சங்கத்தினா் தவறான தகவல்களையும் பரப்பி வருகின்றனா். அஞ்சல் துறையை தனியாா்மயமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அஞ்சலங்களை பெருநிறுவனமயமாக்கல் அல்லது தனியாா்மயமாக்குதலுக்கான எந்தத் திட்டமும் இல்லை என்பதையும் அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அஞ்சலகங்கள் மூலம் மின்னணு வங்கிச் சேவைகள் ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாக வழங்கி வருவதோடு அஞ்சல் கட்டமைப்பை வலுப்படுத்தியும் வருகிறது என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சங்கத்தினா் விவசாயிகள் சங்கத்திற்கு ரொக்கமாக ரூ.4,935, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.50,000 வழங்கியுள்ளனா் என பாஜக தொடா்புடைய பி.எம்.எஸ். சங்கம் புகாா் அளித்தது எனவும் அங்கீகாரத்தை இழந்த சங்கங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.