அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 100 ஆரோக்கிய ‘உணவு வீதி திட்டம்’

வீட்டிற்கு வெளியே சாலையோரங்களில் அல்லது சந்தைப் பகுதிகளில் பொதுமக்கள் ஆரோக்கியமான உணவை பெறும் வகையில், நாடு முழுவதும் ‘உணவு வீதி திட்டம்’ கொண்டு வரப்படவுள்ளது.

News image
Updated On :4 மே 2023, 6:59 pm

 நமது நிருபர்

வீட்டிற்கு வெளியே சாலையோரங்களில் அல்லது சந்தைப் பகுதிகளில் பொதுமக்கள் ஆரோக்கியமான உணவை பெறும் வகையில், நாடு முழுவதும் ‘உணவு வீதி திட்டம்’ கொண்டு வரப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக 100 ஆரோக்கிய உணவு வீதிகளை அமைக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதில் 5 உணவு வீதிகள் தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்படவுள்ளது.

‘உணவு வீதி திட்டம்’ குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா தலைமையில் மத்திய சுகாதாரம் குடும்ப நலத் துறை அமைச்சகத்தில் வியாழக்கிழமை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறை மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணைய (எஃப்எஸ்எஸ்ஏஐ) உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்களில் கூறப்பட்டது வருமாறு: நகரமயமாக்கலில், உணவு வீதி மையங்கள் இன்றியமைததோடு எளிதில் அணுக வழிவகுத்துள்ளன. இது நமது உணவு கலாசாரத்தின் ஒரு அங்கமாகிவிட்டது. மேலும், இது லட்சக்கணக்கான மக்களுக்கு மலிவு விலையில் சுவையான உணவுக்கான ஆதாரமாக மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் முக்கியப் பங்காற்றுகிறது. இருப்பினும், இந்த மையங்களில் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது. உணவு வணிகங்களில், பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதின் மூலம், உணவால் ஏற்படும் நோய்களைக் குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்பட வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் முக்கியக் நோக்கமாகும்.

தமிழகத்திற்கு 4 உணவு வீதிகள்: இதை முன்னிட்டு மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தின் (எஃப்எஸ்எஸ்ஏஐ) தொழில்நுட்ப ஆதரவுடன் , மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் வாயிலாக இந்த முன்முயற்சி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. உணவுத் வீதிகளை வடிவமைத்தல், நிலையான செயல்பாட்டு முறைகள் தயாரித்தல், கேடுகள் (தீங்குகளுக்கான) பகுப்பாய்வு முக்கிய கட்டுப்பாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றில் எஃப்எஸ்எஸ்ஏஐ தொழில்நுட்ப உதவி அளித்து பயிற்சி அளிக்கும். முப்பத்தியாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 100 ‘உணவு வீதி திட்டம்’ கொண்டு வரப்படும். பெரிய மாநிலங்களுக்கு தலா 4 வீதம் இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 4 உணவு வீதிகளும், புதுச்சேரியில் 1 உணவு வீதியும் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னோடி திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒவ்வொரு உணவு வீதிக்கும் நிதியுதவி தலா ரூ. 1 கோடி வரை வழங்கப்படும். தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் வழங்கப்படும் இந்த மானியம் 60 : 40 அல்லது 90 : 10 போன்ற விகிதத்தில் எஃப்எஸ்எஸ்ஏஐயின் வழிகாட்டி முறைகளின்படி உணவு வீதிகள் பிராண்டிங் செய்யும் நிபந்தனைகளுடன் வழங்கப்படும்.

ஆரோக்கிய உணவு வீதி திட்டங்களில் பாதுகாப்பான குடிநீா், கழிப்பறைகள், பொதுவான இடங்களில் தரை அமைத்தல், முறையான திரவ மற்றும் திடக் கழிவுகளை அகற்றல், வணிகத்திற்கான சிறப்பு வாகனங்கள், பிராண்டிங் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.