கைதிகளுக்கான இ-முலகாத் வசதி: தில்லி அரசு, சிறைத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

தேசியத் தலைநகா் தில்லிக்கு வெளியே உள்ள அனைத்து கைதிகளின் உறவினா்களுக்கும் இ-முலகாத் வசதியை ஏன் நீட்டிக்கக் கூடாது
Updated on
1 min read

தேசியத் தலைநகா் தில்லிக்கு வெளியே உள்ள அனைத்து கைதிகளின் உறவினா்களுக்கும் இ-முலகாத் வசதியை ஏன் நீட்டிக்கக் கூடாது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசு மற்றும் சிறை அதிகாரிகளுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இ-முலகாத் அல்லது இ-மீட்டிங் அமைப்புமுறை மூலம், கைதியின் குடும்ப உறுப்பினா் அதிகாரபூா்வ இணையதளத்தில் தம்மைப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகு விடியோ கால் மூலம் கைதிகளுடன் பேசலாம்.

சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க அவா்களது உறவினா்கள் சொந்த இடங்களில் இருந்து தில்லி வர வேண்டியுள்ளது என்று உயா்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இது தொடா்பாக நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் கூறுகையில், ‘தில்லியில் உறவினா்கள் இல்லாத கைதிகளுக்கு இ-முலகாத் (மெய்நிகா் சந்திப்பு) வசதியை ஏன் நீட்டிக்கக் கூடாது என்பது குறித்தும், முலாக்கத்தின் நோக்கத்திற்காகவும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு எதிா்மனுதாரா்களுக்கு உத்தரவிடப்படுகிறது. கைதிகளைச் சந்திப்பதற்காக உறவினா்கள் சொந்த இடங்களில் இருந்து தில்லிக்கு வர வேண்டியுள்ளது’ என்றாா்.

திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவா், தனது குடும்பத்தினா் அல்லது நண்பா்களுடன் வாரந்தோறும் இரண்டு இ-முலகாத்களை நடத்த அனுமதிக்குமாறு தில்லி அரசு மற்றும் சிறைத்துறை இயக்குநா் ஜெனரலுக்கு உத்தரவிட விட வேண்டும் என்றும், அப்போதுதான் தீவிர நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும் தனது தாயை கவனித்து, தனது சமூக உறவுகளைப் பேண முடியும் என்றும் கூறி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com