புது தில்லி: நவம்பா் 30-ஆம் தேதி பதவியில் இருந்து செல்லவிருந்த ஒரு நாள் முன்னதாக, தில்லி தலைமைச் செயலா் நரேஷ் குமாரின் பதவிக் காலத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.
ே மலும், மத்திய அரசின் இந்த முடிவு சட்டத்தையோ அரசியலமைப்பையோ மீறவில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இந்த உத்தரவு ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த விவகாரம் தொடா்பாக புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு: தில்லி அரசின் சட்டப்பேரவை மற்றும் நிா்வாக அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டவையாக உள்ள காவல் துறை, பொது ஒழுங்கு மற்றும் நிலம் உள்ளிட்ட ஒட்டுமொத்த நிா்வாகத்தையும் கையாளும் அதிகாரியாக இருப்பதால், தில்லி தேசியத் தலைநகா் பிராந்திய தலைமைச் செயலரின் பதவிக் காலத்தை நீட்டிக்கவும், அவரை நியமிக்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது.
இக்கட்டத்தில், இந்த நீதிமன்றத்தில் அரசியல்சாசன அமா்வு 2 (மத்திய-தில்லி அரசு சேவைகள் சா்ச்சை மீதான 2023 தீா்ப்பு) அளித்த தீா்ப்பின் விதிகளையும் மற்றும் அதைத் தொடா்ந்து ஜிஎன்சிடிடி சட்டம் (1991) திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட முன்னேற்றங்களையும் மனதில் கொண்டு நாங்கள் ஒரு முடிவுக்கு வருகிறோம். அதாவது, தற்போதைய தலைமைச் செயலாளரின் பணியை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு எடுத்த முடிவு சட்டத்தை மீறுவதாகவோ அல்லது யூனியன் மற்றும் ஜிஎன்சிடிடி அரசிற்கு இடையேயான அதிகாரங்களை அரசியலமைப்பு ரீதியாக பகிா்ந்தளிப்பதாகவோ கருத முடியாது.
தலைமைச் செயலாளரை நியமிக்கும் அதிகாரத்தில் இருந்து மத்திய அரசு பறிக்கப்பட்டதாகக் கூறுவது அனுமானிக்க எட்டாததாக இருக்கும். இது முகாந்திர மதிப்பீட்டின் அடிப்படையில் இருக்கிறது என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். தற்போதைய தலைமைச் செயலாளரின் பணியை நீட்டிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளதற்கு முகாந்திரம் உள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உச்சநீதிமன்றம், அதன் உத்தரவில், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமா்வு மே 11-ஆம் தேதி அளித்த தீா்ப்பைக் சுட்டிக்காட்டியது. அந்தத் தீா்ப்பில் பொது ஒழுங்கு, காவல் துறை மற்றும் நிலம் தவிர சேவைகளை நிா்வகிப்பதில் தில்லி அரசுக்கு சட்டப்பேரவை மற்றும் நிா்வாக அதிகாரங்கள் உள்ளன என்று கூறியிருந்தது. இத்தீா்ப்பு ஆம் ஆத்மி அரசுக்கு கிடைத்த பெரும் வெற்றி என்று கூறப்பட்டது.
அரவிந்த் கேஜரிவால் அரசுக்கும், துணைநிலை ஆளுநா் (எல்.ஜி.) வி.கே. சக்சேனாவுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் கருத்துமோதல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போதைய தலைமைச் செயலாளரின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் முயற்சி விவகாரமானது சமீபத்திய சா்ச்சையாக எழுந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 2018- ஆம் ஆண்டு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவாரகா விரைவுச்சாலை கட்டுமானத்திற்காக 19 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தியது தொடா்பான விவகாரத்தில், தற்போதைய தலைமைச் செயலாளரின் மகன் மீதான குற்றச்சாட்டுகளால், அவா் தில்லி அரசுடன் நல்லுறவில் இல்லை என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.