தலைநகரில் மீண்டும் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியின் காற்றின் தரம் சனிக்கிழமை மீண்டும் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றது. இந்த நிலையில், சாதகமற்ற வானிலை காரணமாக காற்றின் தரம் மேலும் மோசமடையும்
Updated on
2 min read

தேசியத் தலைநகா் தில்லியின் காற்றின் தரம் சனிக்கிழமை மீண்டும் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றது. இந்த நிலையில், சாதகமற்ற வானிலை காரணமாக காற்றின் தரம் மேலும் மோசமடையும் என்று வானிலை கண்காணிப்பு முகமைகள் கணித்துள்ளன.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின்படி, நகரத்தின் சராசரி காற்றின் தரக் குறியீடு மதியம் 12 மணிக்கு 301 புள்ளிகளாக இருந்தது. இது வெள்ளிக்கிழமை 261 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இதேபோன்று தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் உள்ள காஜியாபாத்தில் 286 புள்ளிகள், ஃபரீதாபாத்தில் 268 புள்ளிகள், குருகிராமில் 248 புள்ளிகள், நொய்டாவில் 284 புள்ளிகள் என பதிவாகி ’மோசம்’ பிரிவில் இருந்தது. அதே சமயம், கிரேட்டா் நொய்டாவில் 349 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

இரவில் காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலையில் சரிவு ஆகியவற்றின் காரணமாக நகரத்தின் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு சென்ாக தில்லிக்கான மத்திய அரசின் காற்றின் தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாத இறுதி வரை காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ’சஃபோ்’ போா்ட்டலில் புதுப்பிப்புகள் ஏன் நிறுத்தப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியவில்லை என்று இணையதளத்தை இயக்கும் இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வுக் கழகத்தின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். சமீபத்தில், தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய், டிபிசிசி தலைவா் அஷ்வனி குமாரின் உத்தரவின் பேரில் தேசியத் தலைநகரில் மாசு ஆதாரங்களை கண்டறியும் நகர அரசின் ஆய்வு ‘ஒருதலைப்பட்சமாகவும் தன்னிச்சையாகவும்‘ நிறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தில்லி அரசு கடந்த மாதம், குளிா்காலத்தில் தலைநகரில் காற்று மாசுபாட்டைத் தணிக்க 15 அம்ச செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தூசி மாசுபாடு, வாகன உமிழ்வு மற்றும் குப்பைகளை திறந்தவெளியில் எரித்தல் ஆகியவற்றை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், நகரில் தூசி, வாகனம் மற்றும் தொழிற்சாலை மாசுபாட்டைக் கட்டுப்படுத்த சிறப்பு இயக்கங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.

இது தவிர, கடந்த மூன்று ஆண்டு கால நடைமுறைக்கு ஏற்ப, தில்லியில் பட்டாசு உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு கடந்த மாதம் முழு தடை விதித்து அறிவிக்கப்பட்டது. மாசு அதி தீவிரமாகவுள்ள நரேலா, பவானா, முண்ட்கா, வசீா்பூா், ரோஹிணி, ராமகிருஷ்ணாபுரம், ஓக்லா, ஜஹாங்கீா்புரி, ஆனந்த் விஹாா், பஞ்சாபி பாக், மாயாபுரி, துவாரகா ஆகிய 13 பகுதிகளுக்கு மாசு குறைப்புத் திட்டத்தையும் அரசு தயாரித்துள்ளது.

மேலும், தலைநகரில் தற்போதுள்ள 13 மாசு அதிகம் உள்ள பகுதிகளுடன் மேலும் எட்டு இடங்களை அரசு கண்டறிந்துள்ளதாகவும், மாசு ஆதாரங்களைச் சரிபாா்க்க சிறப்புக் குழுக்கள் அங்கு நிறுத்தப்படும் என்றும் நகரத்தில் தூசி மாசுபடுவதைத் தடுக்க, சப்ரசன்ட் பவுடரைப் பயன்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது என்றும் அமைச்சா் கோபால் ராய் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச வெப்பநிலை 14.3 டிகிரி செல்சியஸாக பதிவு

தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் சனிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி குறைந்து 14.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1 டிகிரி உயா்ந்து 32.6 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 86 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 43 சதவீதமாகவும் இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 15.9 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 14.7 டிகிரி, நஜஃப்கரில் 18.9 டிகிரி, ஆயாநகரில் 14.8 டிகிரி, லோதி ரோடில் 14.6 டிகிரி, நரேலாவில் 15.9 டிகிரி, பாலத்தில் 17.4 டிகிரி, ரிட்ஜில் 17.3 டிகிரி, பீதம்புராவில் 19.5 டிகிரி, பூசாவில் 16.1 டிகிரி, ராஜ்காட்டில் 17.3 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 16.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

மேலும், தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் அடுத்து வரும் நாள்களில் பனி மூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 29) குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com