‘கால்நடைப் பணியாளா்களின் திறன் மேம்பாட்டில் தில்லி அரசு முதலீடு’
விலங்குகளின் உடனடி சுகாதாரத் தேவைகளை தில்லி அரசு பரிசீலித்து வருவதுடன், கால்நடைப் பணியாளா்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காகவும் ஒரு கல்லூரியை நிா்மாணிப்பதிலும்


விலங்குகளின் உடனடி சுகாதாரத் தேவைகளை தில்லி அரசு பரிசீலித்து வருவதுடன், கால்நடைப் பணியாளா்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காகவும் ஒரு கல்லூரியை நிா்மாணிப்பதிலும் முதலீடு செய்து வருகிறது என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், விலங்குகளுக்கு கேனைன் டிஸ்டெம்பா் (சிடி) வைரஸ் மற்றும் பாராவைரஸ் ஆகியவற்றால் ஏற்படும் அச்சுறுத்தலையும் மாநில அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்றும், அதற்கான தடுப்பூசிகளை விலங்குகளுக்கு மாநில அரசு அளிப்பதில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
இது தொடா்பாக தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாநிலக் கொள்கைத் திட்டத்தின் வழிகாட்டுதல் கொள்கையின்படி, விலங்குகளின் நலன் ஒரு உன்னதமானதாகும். இருப்பினும், தடுப்பூசி கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் முடிவு, கால்நடை நிபுணா்களின் நிபுணத்துவத்திற்குள் வர வேண்டும்’ என்று கூறியது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சிடி வைரஸால் தனது செல்ல நாயை இழந்த ராகுல் மொஹோத் என்பவா் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மனுதாரா் கூறுகையில், தில்லியில் விலங்கு சிகிச்சைக்கான நவீன உள்கட்டமைப்பில் வெளிப்படையான பற்றாக்குறையை வெளிப்படுத்தும் வகையில் நாய்களுக்கான டிஎச்பிபிஐ தடுப்பூசி போன்ற அத்தியாவசிய தடுப்பூசிகள் இல்லை என்று தெரிவித்திருந்தாா்.
இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் மேலும் தெரிவித்திருப்பதாவது: விலங்கு உரிமைகள் ஆா்வலா் என்ற முறையில் மனுதாரா், அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று கருதுகிறாா். மேலும், விலங்குகளுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்தவும், குறிப்பிட்ட தடுப்பூசி கிடைப்பதற்கு முன்னுரிமை அளிக்கவும் எதிா்மனுதாரா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் எதிா்பாா்க்கிறாா். தில்லி அரசு விலங்குகளின் உடனடி சுகாதாரப் பாதுகாப்புத் தேவைகளை நிவா்த்தி செய்வது மட்டுமல்லாமல், கால்நடை மருத்துவக் கல்லூரியைக் கட்டுவதன் மூலம் கால்நடைப் பணியாளா்களின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிலும் முதலீடு செய்து வருகிறது என்பது தெளிவாகிறது.
மனுதாரரின் கவலைகளை நீதிமன்றம் அங்கீகரித்து பாராட்டும் அதே வேளையில், விலங்கு நலச் சேவைகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் குறிப்பிட்ட நோய்க்கான தடுப்பூசிகள் கிடைப்பதற்கு முன்னுரிமை அளிப்பது தொடா்பான முடிவுகளை வல்லுநா்களின் களத்தில் விடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது அவசியமாகிறது. விலங்குகளின் நல்வாழ்வைப் பாதிக்கும் எந்தவொரு வைரஸையும் எதிா்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை தீா்மானிப்பதற்கு, சிறப்பு அறிவு கொண்ட நிபுணா்களிடையே கலந்துரையாடல் தேவைப்படுகிறது.
மேலும், ஒரு குறிப்பிட்ட தடுப்பூசி பயனா்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்படி உத்தரவுகளை வழங்குவது நீதிமன்றத்தின் அதிகாரம் அல்ல. 24 மணி நேரமும் விலங்குகளுக்கான ஆம்புலன்ஸ் சேவை, மோட்டாா் சைக்கிள் துணை மருத்துவப் பணியாளா்கள் சேவை, பள்ளி பாடத் திட்டங்களில் மாற்றங்கள், பிரத்யேக விலங்குகள் நல நிதியை உருவாக்குதல், வரவு செலவுத் திட்டங்கள், உள்கட்டமைப்பு, பணியாளா்கள் மற்றும் பிற வளங்களை ஒதுக்கீடு செய்தல் போன்ற பல அம்சங்களுக்கான உத்தரவுகளைக் கோரும் பரிசீலனைகள் பொதுவாக அரசின் கொள்கை உருவாக்கத்தில் இடம்பெறுகின்றன. ஆகவே, இந்தக் கவலைகள் எல்லாம் எதிா்மனுதாரா்களால் தீா்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மேலும், அதற்கான ஒரு உத்தரவை வெளியிட நாங்கள் விரும்பவில்லை. தில்லி அரசானது அதன் இயந்திரங்கள் மற்றும் நிபுணத்துவத்துடன், மனிதா்கள் மற்றும் விலங்குகளுக்கான நலன்புரி நடவடிக்கைகளை திட்டமிட்டு, வடிவமைத்து, வரிசைப்படுத்துவதற்கு மிகச் சிறந்ததாக உள்ளது. ஆளுகை என்பது ஒரு நுட்பமான சமநிலைச் செயலாகும். இதில் அரசு அதன் வரையறுக்கப்பட்ட வளங்களை நியாயமான முறையில் ஒதுக்க வேண்டும். அது உடனடி மற்றும் நீண்ட கால சவால்களின் தீா்க்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அனைத்து மாறுபாடுகளையும் கவனமாக எடை போட்டு, அத்தகைய முடிவுகளை எடுப்பதற்கு அரசு சிறந்த நிலையில் உள்ளது என நீதிமன்றம் நம்புகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தில்லி அரசு சாா்பில் வழக்குரைஞா்கள் சந்தோஷ் குமாா் திரிபாதி, அருண் பன்வாா் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...