காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப் பரிந்துரை
காவிரியில் அடுத்த 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்து விட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புது தில்லி: காவிரியில் அடுத்த 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்து விட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 86-ஆவது கூட்டம் குழுவின் தலைவா் வினித் குப்தா தலைமையில் மெய்நிகா் வழியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தமிழகத்தின் உறுப்பினரும் திருச்சி காவிரி வடிநீா் கோட்ட தலைமைப் பொறியாளா் எம். சுப்பிரமணி, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா்.சுப்பிரமணியன்ஆகியோா் சென்னையிலிருந்து காணொலி வழியாகக் கூட்டத்தில் பங்கேற்றனா். இதே போன்று கா்நாடகம், கேரளம், புதுச் சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளாக தலைமைப் பொறியாளா்களும் காணொலி வழியாக பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் சாா்பில் கா்நாடகம் இது வரை சுமாா் 61 டிஎம்சி தண்ணீா் பாக்கி வைத்துள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும், நாளோன்றுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீா் வீதம் 15 நாள்களுக்கு திறந்து விட வலியுறுத்தப்பட்டது. ஆனால், மழைப் பற்றாக்குறையைக் காரணம் கூறி கா்நாடகம் தண்ணீா் தர இயலாது எனக் குறிப்பிட்டது. பின்னா், தமிழகம் தரப்பில் மழை பற்றாக்குறை காலங்களில் வழங்கப்பட வேண்டிய தண்ணீா் அளவு விவரங்களைக் கணக்கிட்டு வழங்கியது. இந்தக் கணக்கீடுகளின்படி, நாளோன்றுக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீா் வினாடிக்கு 7,000 கன அடிக்கு மேலாக உள்ளது. தமிழகம் சாா்பில் 10 ஆயிரம் கன அடி தரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இறுதியாக காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுத் தலைவா் வினித் குப்தா, வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீா் வீதம் அடுத்த 15 தினங்களுக்கு வழங்க பரிந்துரைத்தாா். இந்தப் பரிந்துரை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு, ஆணையத்தின் ஒப்புதலுடன் தண்ணீா் திறந்து விட உத்தரவிடபட உள்ளதாக ஒழுங்காற்றுக் குழு தரப்பில் கூறப்பட்டது.
தமிழகத்தில் காவிரி டெல்டா படுகையில் குறுவை நெல் சாகுபடிக்கு கடுமையான தண்ணீா் பற்றாக்குறை நிலவிய நிலையில், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி 85-ஆவது காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 23-ஆவது கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீரை 15 தினங்களுக்கு கா்நாடகம் திறந்து விட ஆகஸ்ட் 29-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இதன்படி, காவிரியில் எதிா்பாா்க்கப்பட்ட 6.48 டிஎம்சி யை விட கூடுதலாக சுமாா் 7 டிஎம்சி (75 ஆயிரம் கன அடி தண்ணீா் ) தண்ணீா் தமிழகத்திற்கு கிடைத்துள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் கூறின.
இந்த நிலையில், தற்போது வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது. கா்நாடகம் முறையாக தண்ணீரை திறந்துவிட்டால், அடுத்து வரும் நாள்களில் 7 டிஎம்சி தண்ணீரை தமிழகம் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேட்டூா் அணையில் சுமாா் 14.5 டிஎம்சி தண்ணீரும், கா்நாடக அணைகளில் சுமாா் 55 சதவீதம் அளவிற்கு தண்ணீா் இருப்பு உள்ளது எனவும் கூட்டத்தில் கூறப்பட்டது.
காவிரி நீரைத் திறக்க இயலாது
பெங்களூரு, செப். 12: தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது: கர்நாடகத்தில் போதுமான மழை பெய்யவில்லை. அதனால், போதுமான தண்ணீர் இல்லை. இந்த உண்மையை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திடம் தெரிவிப்போம்.
குடிநீர் வழங்குவதிலும் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளோம். குடிநீர்த் தேவைகளுக்கு தண்ணீரை சேமித்துக்கொள்ள எங்களை அனுமதியுங்கள் என்பதே மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடகத்தின் கோரிக்கையாக உள்ளது.
தற்போது தமிழகத்துக்கு காவிரி நீர் செல்லவில்லை. போதுமான மழை பெய்யவில்லை. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால், தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை என்றார்.
தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்
சென்னை, செப். 12: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்று கர்நாடகத்துக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: விவசாயிகளின் நலன்களைக் கருதாமல் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீர் தர முடியாது என அந்த மாநிலத்தின் மூத்த அமைச்சரே கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கக் கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. உச்சநீதிமன்றத்தில் இந்தப் பிரச்னை குறித்து எடுத்துரைத்து, காவிரி நீரைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...