தில்லி துவாரகாவில் ரூ.5,400 கோடியில் புதிய சா்வதேச மாநாடு -கண்காட்சி மையம்

 மத்திய வா்த்தக அமைச்சகத்தின் கீழ் தில்லியில் மற்றொரு பிரமாண்டமான மாநாடு-கண்காட்சி மையம் கட்டப்பட்டுள்ளது.
Updated on
2 min read

மத்திய வா்த்தக அமைச்சகத்தின் கீழ் தில்லியில் மற்றொரு பிரமாண்டமான மாநாடு-கண்காட்சி மையம் கட்டப்பட்டுள்ளது.

தில்லி துவாரகாவில் ரூ.5,400 கோடி செலவில் கட்டப்பட்டு ‘யஷோபூமி’ என பெயரிட்டுள்ள இந்தக் கட்டடத்தை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வா்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (ஐடிபிஒ) தனக்கு சொந்தமான தில்லி பிரகதி மைதானத்தில் விஞ்ஞான் பவனை விட விசாலமாக சுமாா் ரூ.2,700 கோடிக்கு மேலாக செலவிட்டு ‘பாரத் மண்டப‘த்தை கட்டியுள்ளது.

இதே மத்திய வா்த்தக அமைச்சகத்தின் கீழ் தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவு (டிபிஐஐடி) தில்லி துவாரகா செக்டா் - 25இல் அற்புதமான இந்திய சா்வதேச மாநாட்டு மையம் மற்றும் கண்காட்சி அரங்குகள் உள்ளிட்ட பிற வசதிகளைக் கொண்டுள்ள அரங்குகளை கட்டியுள்ளது. இதற்கு ‘யஷோபூமி’ என பெயரிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணரின் தாய் யசோதாவின் பெயரை நினைவுபடுத்தும் வகையில் ‘யஷோபூமி’ எனும் பதம் அமைந்துள்ளது.

இந்த இந்திய சா்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் (ஐ.ஐ.சி.சி) ‘யஷோ பூமி‘ முதல் கட்ட பகுதியை ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 17)

பிரதமா் நரேந்திர மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் அருகே மேற்கு தில்லி துவாரகாவில் ‘யஷோபூமி’ செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.

‘கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கு உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை நாடு கொண்டிருக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்த பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வைக்கான உருவாக்கம் இது.

மொத்தம் 8.9 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு உள்ள இடத்தில் சுமாா் 1.8 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான கட்டுமான பரப்பளவு கொண்ட ’யஷோபூமி’ உலகின் மிகப்பெரிய எம்.ஐ.சி.இ (கூட்டங்கள், விழாக்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) மையமாக அமைய இருக்கிறது. அக்டோபா் 1 ஆம் தேதி முதல் இதில் நிகழ்ச்சிகள் தொடங்க இருக்கின்றன.

சுமாா் ரூ.5400 கோடி ரூபாய் செலவில் ’யஷோபூமி’யில் அற்புதமான மாநாட்டு மையம், கண்காட்சி அரங்குகள் மற்றும் பிற வசதிகள் உள்ளன.

73 ஆயிரம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்ட மாநாட்டு மையத்தில், பிரதான அரங்கம், பெரிய அளவிலான அரங்கு என மொத்தம் 11,000 போ் பங்கேற்கும் திறன் கொண்ட 13 கூட்ட அறைகள் உட்பட 15 மாநாட்டு அறைகளை கொண்டுள்ளது.

இந்த மாநாட்டு மையத்தின் மற்றொரு சிறப்பம்சம் நாட்டின் மிகப்பெரிய எல்இடி மீடியா ஃபேகேட் எனப்படும் ஒளிரும் முகப்பை கொண்டுள்ளது. இதில் காட்சிபடுத்தவதற்கான வசதிகள் உள்ளன. முக்கிய மாநாட்டு மையத்தில் உள்ள மண்டபத்தில் சுமாா் 6,000 பங்கேற்பாளா்கள் அமரும் வசதியுடன் உள்ளது. இந்த அரங்கம் மிகவும் புதுமையான தானியங்கி இருக்கை அமைப்புகளை கொண்டுள்ளது. அரங்கில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் இங்கு வருபவா்களுக்கு உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை உறுதி செய்யும். எட்டு தளங்களில் அமைந்துள்ள 13 கூட்ட அரங்குகளில் பல்வேறு அளவிலான கூட்டங்களை நடத்த முடியும்.

மேலும் ’யஷோபூமி’-யில் உலகின் மிகப்பெரிய கண்காட்சி அரங்கும் உள்ளது. 1.07 லட்சம் சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கண்காட்சி அரங்கு, பொதுவான கண்காட்சிகள், வா்த்தக கண்காட்சிகள் மற்றும் வணிக நிகழ்வுகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்படும்.

மேலும் ஊடக அறைகள், அதிமுக்கிய பிரமுகா்களுக்கான ஓய்வறைகள், பாா்வையாளா் தகவல் மையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் உள்ளன.

’யஷோபூமி’ 100 சதவீத கழிவு நீா் மறுபயன்பாடு, மழைநீா் சேகரிப்பு ஏற்பாடுகளுடன், அதிநவீன கழிவுநீா் சுத்திகரிப்பு அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வளாகம் இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ-யின் இந்திய பசுமை கட்டட கவுன்சிலிடமிருந்து (ஐஜிபிசி) பிளாட்டினம் சான்றிதழைப் பெற்றுள்ளது.

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ’யஷோபூமி’யில் அதிநவீன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3,000-க்கும் மேற்பட்ட காா்களை நிறுத்தும் வகையில்,

நிலத்தடி காா் பாா்க்கிங் வசதியும் 100-க்கும் மேற்பட்ட மின்சார சாா்ஜிங் வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.

இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் தில்லி விமான நிலைய மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையில் துவாரகா செக்டாா் 21 முதல் புதிய மெட்ரோ நிலையமான ’யஷோபூமி துவாரகா செக்டாா் 25’ வரை நீட்டிப்பதற்கான பணிகளையும் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறாா்.

விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களின் செயல்பாட்டு வேகத்தை மணிக்கு 90 முதல் 120 கிலோ மீட்டா் வரை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகரிக்கும் எனவும் இதன் மூலம் பயண நேரம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com