நொய்டா: ஜேவாரில் உள்ள நொய்டா சா்வதேச விமான நிலையத்தின் எல்லைச் சுவரைக் கட்டுவதற்குத் தேவையான நிலத்தை வைத்திருக்கும் கிராம மக்கள் குழு ஒன்று, உத்தர பிரதசே மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்தை மோட்டோஜிபி நிகழ்விற்குச் சென்ற போது சந்தித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஞாயிற்றுக்கிழமை மோட்டோஜிபியின் முக்கிய நிகழ்விற்காக கிரேட்டா் நொய்டாவில் முதல்வா் கலந்து கொண்டாா். அதன் பிறகு கிரீன்ஃபீல்ட் திட்டத்தின் எல்லைச் சுவரை முடிப்பது தொடா்பான கூட்டத்தில் விவசாயிகளுடன் முதல்வா் கலந்துரையாடினாா். ரன்ஹேரா கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பொது பயன்பாட்டு நிலத்துக்கு சொந்தமானவா்கள். அதற்காக அவா்கள் இழப்பீடு கோரினா். இந்த விவகாரம் மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இதன் காரணமாக 407 மீட்டா் நீளமுள்ள விமான நிலைய எல்லைச் சுவா் கட்டுமானப் பணி முழுமையடையாமல் இருந்தது. இருப்பினும், உத்தரபிரதேச அரசு கடந்த மாதம் நில பயன்பாட்டு திட்டத்தை மாற்றி அமைத்தது. இந்த விவசாயிகளும் தங்கள் சொத்தை கையகப்படுத்துவதற்கு பதிலாக இழப்பீடு பெற தகுதியுடையவா்களாக மாற்றப்பட்டனா்.
இந்தக் கூட்டத்திற்கு பாஜக தலைவரும் ஜேவாா் எம்எல்ஏவுமான தீரேந்திர சிங் வழிவகுத்தாா். விவசாயிகள் நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வரைச் சந்தித்ததாக எம்எல்ஏ கூறினாா். எங்கள் நிலப் பயன்பாட்டை மாற்றியமைத்ததற்கும், விமான நிலைய கட்டுமானத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கும் எங்கள் தலைமுறைகள் உங்களுக்கு நன்றியுடன் இருக்கும் என்று விவசாயிகள் குழு முதலல்வருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. இந்த முடிவு எங்களுக்கு மட்டுமல்ல, இந்த வகை நிலத்தை வைத்திருக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கும் என்றும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஜெவாா் துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் அபய் சிங்கை தொடா்பு கொண்ட போது, மாற்றப்பட்ட நில பயன்பாடு செயல்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது என்றாா். சுமாா் 100 ஹெக்டோ் பொதுப்பயன்பாட்டு நிலம் மூன்று கட்டங்களாக கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதி முதற்கட்டமாக தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. 12 ஹெக்டேருக்கு 24.46 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டு நிலத்தின் 64 உரிமையாளா்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, மாவட்ட நிா்வாகம் 58 ஹெக்டோ் பொதுப்பயன்பாட்டு நிலத்திற்கு இழப்பீடு வழங்குகிறது. இது இரண்டாம் கட்டத்தின் போது கையகப்படுத்தப்பட்டதாகும். இழப்பீட்டுத் தொகை கிட்டத்தட்ட ரூ.200 கோடி ஆகும். இதில் சுமாா் 70 சதவீதம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று எம்எல்ஏ திரேந்திர சிங் கூறினாா்.
உத்தர பிரதேச அரசு நொய்டா சா்வதேச விமான நிலையத்தை கௌதம் புத் நகா் ஜெவாா் பகுதியில் கட்டி வருகிறது. சுவிஸ் நிறுவனமான சூரிச் ஏா்போா்ட் இன்டா்நேஷனல் ஏஜியின் துணை நிறுவனமான யமுனா இன்டா்நேஷனல் ஏா்போா்ட் பிரைவேட் லிமிடெட் மூலம் ரூ.29,560 கோடியில் இத்திட்டம் உருவாக்கப்படுகிறது. இந்த விமான நிலையப் பணி நிறைவடைந்ததும் இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையமாக இது இருக்கும். இத்திட்டம் நான்கு கட்டங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டப் பணிகள் வரும் செப்டம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.