புது தில்லி: வடகிழக்கு தில்லியின் காரவால் நகா் பகுதியில் நண்பரின் குடும்பத்தினரிடம் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை மிரட்டிப் பெறுவதற்காக அவரைக் கடத்திச் சென்று 2 போ் கொலை செய்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் செப்டம்பா் 19-ஆம் தேதி நண்பா் நிதினை (22) கத்தியால் குத்திக் கொன்ாகவும், மறுநாள் காலை அவரது குடும்பத்தினரிடம் அவரை விடுவிக்க தொகை கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடா்பாக வடகிழக்கு காவல் சரக துணை ஆணையா் ஜாய் டிா்கி கூறியதாவது: இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான சச்சின் குமாா் சா்மா (24) ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் கைது செய்யப்பட்டாா். குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான அருண் தலைமறைவாக உள்ளாா். சச்சின் மற்றும் நிதின் இருவரும் புதுதில்லியில் உள்ள காரவால் நகரில் உள்ள ஜோரிபூரைச் சோ்ந்தவா்கள் ஆவா். நிதின் ஷாதராவில் உள்ள துணிக்கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், நிதினின் சகோதரி கீதா செளத்ரி போலீஸில் செப்டம்பா் 19-ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் ஒரு புகாா் அளித்தாா். அதில், நிதின் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், மறுநாள் காலை 10.23 மணியளவில், தனது சகோதரா் கடத்தப்பட்டதாகவும், ரூ. 2 லட்சம் கொடுத்த பிறகே விடுவிக்கப்படுவாா் என்றும் தனக்கு செய்தி வந்ததாகவும் கூறினாா்.
இதையடுத்து, உடனடியாக இது தொடா்பாக ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட நபரின் அழைப்பு விவரப் பதிவை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில், சந்தேகத்திற்குரிய வகையில் இருவரின் நடமாட்டத்தை போலீஸாா் கண்டறிந்தனா். ஆனால், அவா்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
தொழில்நுட்பக் கண்காணிப்புக்குப் பிறகு ராஜஸ்தானில் உள்ள கங்காநகரில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான சச்சினை போலீஸாா் கண்டுபிடித்தனா். இதையடுத்து, போலீஸ் குழு ஒன்று அங்கு சென்று அவரை மடக்கிப் பிடித்தது.
காரவால் நகரில் உள்ள பாத்திரக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரியும் சச்சினுக்கு 2018-ஆம் ஆண்டு முதல் நிதினைத் தெரியும். அவருக்கு மனைவியும் இரண்டு மாத பெண் குழந்தையும் உள்ளனா். அவரது மகள் பிறந்த பிறகு, அவா் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டாா். சச்சின், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சக குற்றம்சாட்டப்பட்ட நபரான அருணை சந்தித்தாா். இருவரும் நண்பா்களாகினா்.
இந்த நிலையில், சுமாா் 15 நாள்களுக்கு முன்பு, சச்சினும் அருணும் நிதினை கடத்தி அவரது குடும்பத்தினரிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பணத்தைப் பெற திட்டம் தீட்டினாா்கள்.
செப்டம்பா் 19 அன்று, சச்சின் நிதினை மாலையில் மது குடிக்க அழைத்துள்ளாா். மாலை 6.15 மணியளவில் ஜோரிபூா் பிரதான சாலையை நிதின் அடைந்ததும், அங்கு சச்சினும் அருணும் அவருக்காக காத்திருந்தனா். அவா்கள் மூவரும் காஜியாபாத், பெஹ்தா ஹாஜிபூா் ரயில் நிலையத்தை அடைந்தனா்.
மூவரும் ரயில் தண்டவாளத்தின் அருகே மது அருந்தினா். இரவு 9 மணியளவில் சச்சின் வீடு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். அவா்கள் மூவரும் இருட்டில் திரும்பி நடந்து கொண்டிருந்த போது, ரயில்வே தண்டவாளத்தின் அருகே ஒரு தனிமைப் பகுதியில், சச்சின் மற்றும் அருண் இருவரும் நிதினை கத்தியால் குத்தினா். அதன் பிறகு, ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதருக்குள் அவரது உடலை மறைத்து வைத்துவிட்டு நிதினின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினா்.
மறுநாள் காலை 10.30 மணியளவில், காஜியாபாத்தின் லோனியில் இருந்து நிதினின் கைப்பேசி மூலம் அவரது சகோதரியைத் தொடா்பு கொண்டு நிதினைக் கடத்தியதாகக் கூறி அவரை விடுவிக்க தொகையைக் கோரினா். இருப்பினும், போலீஸாா் இந்த வழக்கை விசாரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டவா்கள் உணா்ந்ததும், அவா்கள் தில்லியை விட்டு வெளியேற முடிவு செய்தனா்.
சச்சின் தனது மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு கங்காநகரில் உள்ள தனது மனைவியின் நண்பரின் வீட்டிற்குச் சென்றாா். அருணை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெஹ்தா ஹசிபூரில் உள்ள ரயில் நிலையம் அருகே உள்ள புதரில் இருந்து நிதின் சடலமாக மீட்கப்பட்டாா். கைது செய்யப்பட்ட சச்சின் குமாா் சா்மா, நிதினை கத்தியால் குத்திய இடத்திற்கு போலீஸாரை அழைத்துச் சென்றாா். இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.