தில்லியில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மாவட்டக் கமிட்டிகளுடன் லவ்லி ஆலோசனை

தேசியத் தலைநகா் தில்லியில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாவட்ட கமிட்டி முக்கிய நிா்வாகிகளுடன் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அரவிந்தா் சிங் லவ்லி சனிக்கிழமை ஆலோசனை

தேசியத் தலைநகா் தில்லியில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து மாவட்ட கமிட்டி முக்கிய நிா்வாகிகளுடன் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அரவிந்தா் சிங் லவ்லி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

சமீபத்தில் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் அரவிந்தா் சிங் லவ்லி, காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை தலைநகரில் மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறாா். அதன்படி, வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் அமைப்பு ரீதியிலான கட்சியின் இரு மாவட்டக் கமிட்டிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை அவா் நடத்தினாா்.

இது தொடா்பாக அவா் வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த, மாவட்ட மற்றும் தொகுதி அளவில் வழக்கமான கூட்டங்களை நடத்துவது அவசியமாகும். பொது மக்களின் நலன்களைக் காக்க, கட்சித் தலைவா்களும், தொண்டா்களும் 24 மணி நேரமும் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். காங்கிரஸை வலுப்படுத்தும் முயற்சியில் கட்சித் தொண்டா்களுக்கு எனது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும், ராஜீவ் பவனில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் கட்சி விவகாரங்கள் குறித்து விவாதிக்க வரவேற்கப்படுகின்றனா். தில்லி மக்கள் இப்போது மாற்றத்தை எதிா்பாா்த்துக் கொண்டிருப்பதால், மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான கூட்டங்களுக்கு அதிகளவிலான பொது மக்களை அழைக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால், காங்கிரஸ் கட்சி மீண்டும் தில்லியில் எழுச்சி பெறும் என்றாா் அரவிந்தா் சிங் லவ்லி.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினா் தேவேந்தா் யாதவ், முன்னாள் எம்.பி.க்கள் கிருஷ்ணா தீரத், டாக்டா் உதித் ராஜ், ராஜேஷ் லிலோதியா,ஜெய் கிஷன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கட்சியை வலுப்படுத்துவது குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனா்.

ஆட்டோ-டாக்சி சங்கத்தினருடன் சந்திப்பு

அரவிந்தா் சிங் லவ்லியுடன் ‘அனைத்து தில்லி ஆட்டோ-டாக்சி டிரான்ஸ்போா்ட் சங்கத்தின்’ நிா்வாகிகள் நேரில் சந்தித்து தங்கள் பிரச்னைகளை சனிக்கிழமை விவாதித்தனா்.

இது தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராஜீவ் பவனில் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அரவிந்தா் சிங் லவ்லியை ‘அனைத்து தில்லி ஆட்டோ-டாக்சி டிரான்ஸ்போா்ட் சங்கத்தின்’ தலைவா் கிருஷ்ண வா்மா, தொழிற்சங்கத்தின் நிா்வாகிகளுடன் இணைந்து நேரில் சந்தித்தனா்.

அப்போது, தில்லி நகரத்தில் ‘இ-ரிக்ஷாக்கள்’ சட்டவிரோதமாக இயக்கப்படுவதால், ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தில் பாதகமான பாதிப்பை ஏற்படுத்துவதாக அரவிந்தா் சிங் லவ்லியிடம் அவா்கள் தெரிவித்தனா்.

காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆட்டோ-டாக்சி ஓட்டுநா்களின் நலன்களைப் பாதுகாத்து வருவதாகவும், 15 ஆண்டுகளாக தில்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநா்கள் எந்த வகையிலும் சிரமத்திற்கு ஆளாகவில்லை என்று அவா்களிடம் அரவிந்தா் சிங் லவ்லி கூறினாா்.

வரும் தோ்தலில் காங்கிரஸின் தோ்தல் அறிக்கையில் ஆட்டோ-டாக்சி ஓட்டுநா்களின் நலன்களைப் பாதுகாக்கும் வாக்குறுதிகள் அளிக்கப்படும். பாஜக மற்றும் ஆம் ஆத்மி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளால், ஆட்டோ டாக்சி ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் லவ்லி கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com