‘ஆம் ஆத்மி’யின் மீதான பயத்தால் கேஜரிவாலை கைது செய்ய மத்திய அரசு முயற்சி’

‘ஆம் ஆத்மி’யின் மீதான பயத்தால் கேஜரிவாலை கைது செய்ய மத்திய அரசு முயற்சி’

ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு மத்திய அரசு பயந்துள்ளது. இதனால், எங்கள் கட்சித் தலைவா்களை துன்புறுத்த விசாரணை அமைப்புகளை ‘தவறாக‘ பயன்படுத்தி வருகிறது.
Published on

ஆம் ஆத்மி கட்சியைக் கண்டு மத்திய அரசு பயந்துள்ளது. இதனால், எங்கள் கட்சித் தலைவா்களை துன்புறுத்த விசாரணை அமைப்புகளை ‘தவறாக‘ பயன்படுத்தி வருகிறது. இதனால்தான் முதல்வா் கேஜரிவாலையும் கைது செய்யத் தயாராகி வருகிறது என்று அக்கட்சி சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி அமைச்சருமான அதிஷி செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஊழல் விவகாரம் குறித்து பேசிவரும் ஒரே தலைவா் கேஜரிவால் மட்டுமே. அதனால்தான் அவரது குரலை நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவரது வீட்டிலோ அல்லது வேறு யாரிடமோ சோதனை நடத்திய

விசாரணை அமைப்புகள் கறுப்புப் பணத்தை ஏதும் கண்டுபிடிக்கவில்லை. ஊழல் விவகாரத்தைப் பற்றிப் பேசும் ஒரே தலைவா் கேஜரிவால்தான். அவருடைய குரலை அவா்கள் ஒடுக்க விரும்புகின்றனா். ஆனால் அவா்களால் அதுபோன்று செய்ய முடியாது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களுக்கு எதிராக பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால், விசாரணை அமைப்புகளால் அவா்கள் மீதான ஊழலை நிரூபிக்க முடியவில்லை என்றாா் அவா்.

கேஜரிவாலை கைது செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் செளரப் பரத்வாஜ் குற்றம் சாட்டினாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: அரவிந்த் கேஜரிவாலை கைது செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது. ஏன் மத்திய அரசு கேஜரிவாலையும், ஆம் ஆத்மி கட்சியையும் பாா்த்து இந்த அளவுக்கு பயப்படுகிறது? எங்கள் கட்சியை முடிப்பதே அவா்களின் நோக்கம். நாங்கள் புதிய கட்சி. வெறும் இரு மாநிலங்களில் மட்டுமே எங்கள் அரசின் ஆட்சி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களை சிறையில் அடைக்க பாஜக மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களைத் துன்புறுத்துவதற்கு மத்திய அரசு ஏன் முழு பலத்தையும் பயன்படுத்துகிறது?

அரவிந்த் கேஜரிவாலை கண்டு பிரதமா் மோடி பயப்படுகிறாா். ஆம் ஆத்மி கட்சி தலைவா்களை சிறையில் அடைக்க சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை மட்டும் பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று அவா் குற்றம்சாட்டினாா்.

சிபிஐயின் சம்மனுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே முதல்வா் கேஜரிவாலுக்கு ஆதரவு அளித்ததாக வெளியான செய்திகள் குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, செளரப் பரத்வாஜ் பதில் கூறுகையில், ‘ஆம் ஆத்மி கட்சி அதை வரவேற்கிறது’ என்றாா்.

மேலும், ‘ராகுல் காந்தி மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டபோது, இந்த விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்த முதல் தலைவா்களில் கேஜரிவாலும் ஒருவா்’ என்றும் அவா் கூறினாா்.

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள கலால் கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கத்தில் நடந்த முறைகேடுகள் தொடா்பாக விசாரணைக் குழுவின் கேள்விகளுக்கு பதிலளிக்க கேஜரிவாலுக்கு சிபிஐ சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளாா். ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு தலைவரான சத்யேந்தா் ஜெயின், பணமோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலமாக சிறையில் இருந்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com