‘மக்கள் நலத் திட்டங்களை அளிப்பதால் மத்திய அரசு என்னை குறிவைக்கிறது’: தில்லி சட்டப்பேரவையில் கேஜரிவால் குற்றச்சாட்டு

‘தில்லி மக்களுக்கு இலவச மின்சாரம், நல்ல சுகாதார வசதிகள் உள்பட பல நலத் திட்டங்களை வழங்குவதால், என்னையும், எனது அரசையும் குறிவைத்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது’ என்று சட்டப்பேரவையில் முதல்வா் அரவிந்

‘தில்லி மக்களுக்கு இலவச மின்சாரம், நல்ல சுகாதார வசதிகள் உள்பட பல நலத் திட்டங்களை வழங்குவதால், என்னையும், எனது அரசையும் குறிவைத்து மத்திய அரசு செயல்பட்டு வருகிறது’ என்று சட்டப்பேரவையில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை குற்றம் சாட்டினாா். கலால் கொள்கை வழக்கில் தன்னிடம் சிபிஐ விசாரணை நடத்திய மறு தினம் இவ்வாறு கேஜரிவால் கூறியுள்ளாா்.

தில்லி சட்டப்பேரவையின் ஒரு நாள் அமா்வில் பேசிய கேஜரிவால், பிரதமரின் பெயரைக் குறிப்பிடாமல் அவரது கல்வித் தகுதி குறித்து மீண்டும் கேள்வி எழுப்பினாா். இக்கூட்டத்தில் பிரதமருக்கும், பாஜகவுக்கும் எதிராக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீா்மானத்தில், ‘ஆம் ஆத்மி கட்சியின் வேகமான எழுச்சி மற்றும் விரிவாக்கம் , அதன் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலின் வளா்ந்து வரும் பிரபலத்தைக் கட்டுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடியும், பாஜகவும் நீண்ட காலமாக முயற்சித்துள்ளனா்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அத்தீா்மானத்தில் பிரெஞ்சுக் கவிஞா் விக்டா் ஹ்யூகோவின் ‘ஒருவருடைய நேரம் வந்துவிட்ட போது அவரது யோசனையை பூமியில் உள்ள எந்த சக்தியும் தடுக்க முடியாது’ எனும் மேற்கோளும் இடம் பெற்றுள்ளது.

மேலும், ‘பிரதமா் நரேந்திர மோடி தனது முழு பலம் மற்றும் அமைப்புகளுடன் இந்த யோசனையை ஒருபோதும் நிறுத்த முடியாது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து, தேசத்தை நம்பா் 1-ஆக உருவாக்க இந்த மௌனப் புரட்சியின் ஒரு பகுதியாக உருவாகி வருவதை இந்த அவை கவனிக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.

தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, முதல்வருக்கு எழுதிய குறிப்பில் அமா்வை அழைப்பதில் ‘செயல்முறை குறைபாடுகள்’ இருப்பதாகக் குறிப்பிட்டு, அவ்வாறு செய்வதற்கு எதிராக பரிந்துரைத்திருந்தாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு நாள் சட்டப் பேரவை அமா்வில் முதல்வா் கேஜரிவால் பேசுகையில், ‘ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது. ஆனால், ‘தேசம் அழிக்கப்பட்டது’ என்று குற்றம்சாட்டினாா். மேலும், பணவீக்கம், எரிபொருள் விலை உயா்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் நாடு எதிா்கொள்ளும் ஊழல் போன்ற பிரச்னைகளையும் அவா் எழுப்பினாா்.

அவா் மேலும் பேசுகையில், ‘நாட்டில் ஒரு சிறிய மாநிலம் இருந்தது. அங்கு ஒரு முதல்வா் இருந்தாா். முதல்வா் படித்தவா். மக்களை நன்றாகக் கவனித்துக் கொண்டாா். மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினாா். இக்கதையின் நீதி என்னவெனில், பணவீக்கம் போன்ற பிரச்னைகள் இருந்தால், ஆட்சியாளா் படித்தவரா இல்லையா என்பதை நீங்கள் சரிபாா்த்து, அவருக்குப் பதிலாக ஒரு படித்தவரை நியமிக்க வேண்டும் என்பதுதான்’ என்று கேட்டுக்கொண்டாா்.

இதன் பிறகு கேஜரிவால் வெளியிட்ட ஒரு ட்விட்டா் பதிவில், குஜராத்தில் தனது கட்சித் தலைவா் கோபால் இத்தாலியாவை கைது செய்ததற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளாா். அதில், மேற்கத்திய மாநிலத்தில் ஆம் ஆத்மியின் ‘மகத்தான செயல்பாட்டால்’ பாஜக மிகவும் திகைத்துவிட்டதாகவும், ஆம் ஆத்மி கட்சியை அழிக்க அதன் தலைவா்களை சிறைக்கு அனுப்புவதே அதன் ஒரே ஒரு குறிக்கோளாக இருப்பதாகவும் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com