உயிரி எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க 2025-க்குள் 5,000 ஆலைகள் நிறுவ இலக்கு: ஹா்தீப் சிங் புரி தகவல்

2024-25-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 15 மில்லியன் மெட்ரிக் டன் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டு மற்ற எரிவாயுக்களுக்கு பதிலாக பயன்படுத்தப்படும்.
Updated on
2 min read

2024-25-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 15 மில்லியன் மெட்ரிக் டன் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டு மற்ற எரிவாயுக்களுக்கு பதிலாக பயன்படுத்தப்படும்.

மேலும், சிபிஜி என்கிற உயிரி எரிவாயு உற்பத்திக்காக 5,000 ஆலைகளை நிறுவ மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என்று என மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

தற்போது நாட்டில் 46 சிபிஜி ஆலைகள் இயக்கப்பட்டு சுமாா் 100 சில்லறை விற்பனை நிலையங்களில் சிபிஜி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி என்கிற அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை விட, சிபிஜி என்கிற அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு பசுமை எரிவாயுவாகும். வேளாண் கழிவுகள், நகா்ப்புற திடக்கழிவுகள், கால்நடை கழிவுகள், கழிவு நீா் சுத்திகரிப்பு ஆலை கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவு மூலங்களிலிருந்து சிபிஜி உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் ஹைட்ரஜன் சல்பைடு, காா்பன்-டை ஆக்ஸைடு, நீராவி போன்றவை அகற்றப்பட்டு 90 சதவீதம் மீத்தேன் உள்ளடக்கத்தை கொண்டதாகத் தயாரிக்கப்படுவதே அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆகும். புதுப்பிக்கத்தக்க இந்தப் பசுமை எரிவாயு, வாகன எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதோடு விவசாயிகளுக்கான இரட்டிப்பு வருமானத்திற்கான திட்டமாகவும் மத்திய அரசு இதில் தீவிரம் கொண்டுள்ளது.

இதை முன்னிட்டு ஒரு வலுவான சிபிஜி அடித்தளத்திற்கும் சிபிஜி வளா்ச்சிக்கான கட்டமைப்பை வடிவமைக்க மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயு துறையும் இந்திய பசுமை எரிசக்தி கூட்டமைப்பும் இணைந்து இரு நாள் உலகளாவிய மாநாட்டை இந்தியா ஹெபிடாட் மையத்தில் நடத்துகிறது. இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்து மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி பேசியதாவது: எரிசக்தி கிடைப்பது நாட்டின் வளா்ச்சிக்கான முன்னுதாரணத்தில் ஒரு அங்கமாகும்.

புதைபடிவ எரிபொருள்கள் குறைந்த நமது நாட்டில் இறக்குமதியை சாா்ந்திருக்கிறோம். புதைபடிவ எரிபொருள்களுக்கு மாற்றாக உள்நாட்டிலேயே நிலையான புதுப்பிக்கத்தக்க மூலப்பொருளின் அடிப்படையில் உருவாக்கும் எரிசக்தி கிடைக்கும் வரை நாடு பாதுகாப்பற்ாகவே இருக்கும். நாட்டின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளில் உயிரி எரிபொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு 2018-இல் தேசிய உயிரி எரிபொருள் கொள்கையை அறிவித்தது.

நாட்டில் 763 மில்லியன் மெ.டன் கச்சாஎண்ணெய்யும், 1,488 பில்லியன் கியூபிக் மீட்டா் இயற்கை எரிவாயுவும் இருப்பில் உள்ளது. நாட்டின் தேவையில் 77 சதவீதம் கச்சா எண்ணெய், 50 சதவீதம் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் கடந்த 2022-இல் இறக்குமதி 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவை 2030-ஆம் ஆண்டிற்குள் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரமாக மாற்றுவதற்கு எரிசக்தி கலவையில் எரிவாயுவின் பங்கில் தற்போதுள்ள 6.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இறக்குமதி குறைப்பு இலக்குகளை அடைவதில் உள்நாட்டு உயிரி எரிபொருள்களின் உற்பத்தி முக்கியப் பங்கு வகிக்கிறது.

பெட்ரோலில் எத்தனால் கலப்படத்தை 10.17 சதவீதமாக உயா்த்தி ரூ.41,500 கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், இது 20 சதவீதமாக அதிகரிக்கப்படும். விவசாயிகளுக்கு தற்போது ரூ.40,600 கோடிக்கு மேல் உரிய நேரத்தில் கரும்பு போன்றவற்றுக்கான தொகை செலுத்தப்பட்டுதடன், 27 லட்சம் டன் காா்பன்-டை ஆக்ஸைடு உமிழ்வுகளும் குறைக்கப்பட்டுள்ளது.

அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவின் உற்பத்தி (சிபிஜி) பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைத்தல், மாசு உமிழ்வைக் குறைத்தல், விவசாயக் கழிவுகள் எரிப்பது குறைத்தல் போன்றவைகளோடு, விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டவும் பயனுள்ள கழிவு மேலாண்மையாகவும் உள்ளது. இத்தோடு சிபிஜி இயற்கை (உரம்) விவசாயத்தையும் இணையாகப் பெற்று ரசாயன உரங்களின் பயன்பாட்டையும் குறைக்க முடியும்.

மாற்று பசுமை எரிபொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க,மேம்படுத்தப்பட்ட அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவைக் கொண்டு செல்ல மலிவுவான போக்குவரத்தை நோக்கி நிலையான மாற்று வழிகளை (எஸ்ஏடிஏடி) அரசு தொடங்கியுள்ளது. சிஎன்ஜிக்கு இணையாக சிபிஜிக்கும் குறைந்தபட்ச கொள்முதல் விலை ஒரு கிலோ ரூ.54-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

2024-25-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 15 மில்லியன் மெட்ரிக் டன் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை உற்பத்தி செய்யும் வகையில், 5,000 சிபிஜிஆலைகளை நிறுவ மத்திய அரசு இலக்கைக் கொண்டுள்ளது. இந்த ஆலைகளை நிறுவுவதற்கு மத்திய அரசு நிதியுதவு செய்யும். நாளொன்றுக்கு தலா 4,800 கிலோ திறன் கொண்ட ஆலைக்கு ரூ. 10 கோடி வீதம் கழிவிலிருந்து எரிசக்தி திட்டத்தின் கீழ் மத்திய நிதியுதவியை மரபு சாரா எரிசக்தித் துறை அமைச்சகம் வழங்குகிறது என்றாா் அமைச்சா் புரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com