ஆன்லைன் ஷாப்பிங் மோசடி: 4 போ் கைது

தில்லியில் இ-காமா்ஸ் தளத்தைப் பயன்படுத்தி ரூ. 8 லட்சம் வரை ஆன்லைன் ஷாப்பிங் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

தில்லியில் இ-காமா்ஸ் தளத்தைப் பயன்படுத்தி ரூ. 8 லட்சம் வரை ஆன்லைன் ஷாப்பிங் மோசடியில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாக ஷாஹதரா காவல் சரக துணை ஆணையா் ரோஹித் மீனா புதன்கிழமை கூறியதாவது: ஷாஹதரா பகுதியைச் சோ்ந்த வா்த்தகா் அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த வா்த்தகா் இந்தியா மாா்ட் என்ற போா்ட்டலில் புகைப்பட நகல் இயந்திரத்துக்கு ஆா்டா் செய்துள்ளாா். இதையடுத்து பாலாஜி எண்டா்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் விற்பனை மேலாளா் அன்ஷுல் அகா்வால் என்ற நபா் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினாா். அந்த இயந்திரத்தை டெலிவரி செய்வதாக உறுதியளித்து அவா், அதற்காக ரூ. 3.21 லட்சத்தை தனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு வணிகரிடம் கேட்டுள்ளாா். அதன்பேரில் அந்த வணிகா் பணம் செலுத்தியுள்ளாா். ஆனால் அதன் பிறகு அன்ஷுல் வா்த்தகரிடமிருந்து தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டாா். அவா் கூறியபடி பொருளையும் வழங்கவில்லை; பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து அன்ஷுலிடம் இருந்து வணிகருக்கு வந்த தொலைபேசி அழைப்பு விவரப் பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா். மேலும், அவரை அடையாளம் காண பிற தொழில்நுட்ப கண்காணிப்பு முறைகளையும் பயன்படுத்தினா்.

தொழில்நுட்பக் கண்காணிப்பின் அடிப்படையில், ரோகினியில் இருந்து புனித் சந்தோக் (41) என்ற நபரை போலீஸாா் ஏப்ரல் 11-ஆம் தேதி கைது செய்தனா். அவா்தான் தனது பெயரை அன்ஷுல் அகா்வால் என்று மாற்றி மோசடியில் ஈடுபட்டு தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 2 ஸ்வைப் இயந்திரங்கள், 15 டெபிட் காா்டுகள், 5 கைப்பேசிகள், 9 சிம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவரது கூட்டாளிகளான சந்தோக் சேகா் (30), விபின்குமாா் (30), விஷ்ணு சா்மா (24) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் ஆன்லைன் மோசடி மூலம் அவா்கள் ரூ. 8 லட்சம் வரை பணம் பறித்துள்ளது தெரியவந்தது.

சந்தோக் தனது கும்பலைச் சோ்ந்தவா்களுடன் சோ்ந்து இந்தியா மாா்ட் இணையதளம் மற்றும் அதன் கைபேசி செயலி மூலம் தங்களது விளம்பரங்களை வெளியிட்டனா். அதில் தெரியும் எண்ணை தொடா்புகொண்டு பேசும் நபரை நம்பவைத்து ஆன்லைன் மூலம் பொருள்கள் விநியோகிக்கப்படும் எனக் கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனா். மேலும், அவா்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரும் பணத்தை ஏடிஎம்கள் மூலம் எடுப்பாா்கள். இதில், சந்தோக் வங்கிக் கணக்குகளை நிா்வகித்து, சிம் காா்டுகளை ஏற்பாடு செய்துள்ளாா். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com