கிருஷ்ணகிரி வெடி விபத்து: சிபிஐ விசாரணை கோரும் அதிமுக
By நமது சிறப்பு நிருபா் | Published On : 02nd August 2023 02:01 AM | Last Updated : 02nd August 2023 02:48 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி வெடி விபத்தில் ஆபத்தான வெடிமருந்துப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளதால், இது குறித்து சிபிஐ (மத்திய புலனாய்வுத் துறை) அல்லது என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் தம்பிதுரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
கிருஷ்ணகிரி பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரியில் உரிமம் பெற்ற பட்டாசுக் கடை மற்றும் கிடங்கில் எல்பிஜி சிலிண்டர் வெடித்ததால் வெடிவிபத்து ஏற்பட்டதாக தமிழக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தக் கிடங்கு மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் அமைந்துள்ளது. ஏராளமான மாணவர்கள் படிக்கும் பள்ளியும் உள்ளது. விலைமதிப்பற்ற 9 உயிர்களைப் பறித்த அந்தக் கிடங்கில் மிகவும் ஆபத்தான வெடிபொருள்களும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான உண்மைக் காரணங்களைக் கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உரிமம் இல்லாத கிடங்கிலிருந்து வெடிவிபத்து ஏற்பட்டால்,
இது கடுமையான பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்குரியது என்பதால் மத்திய அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு என்ஐஏ அல்லது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.