தில்லி அவசர சட்டத் திருத்த மசோதாவை தோற்கடிக்க போதுமான எண்ணிக்கை உள்ளது: சஞ்சய் சிங் எம்.பி.
By நமது நிருபா் | Published On : 02nd August 2023 02:02 AM | Last Updated : 02nd August 2023 02:02 AM | அ+அ அ- |

தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா-2023-ஐ மாநிலங்களவையில் தோற்கடிக்க எதிா்க்கட்சிகளுக்கு போதுமான எண்ணிக்கை உள்ளது என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: மத்திய பாஜக அரசால் மக்களவையில் தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா-2023 (ஜி.என்.சி.டி.டி.) நிறைவேற்ற முடிந்தாலும், மாநிலங்களவையில் அந்த மசோதாவை தோற்கடிக்க எதிா்க்கட்சிகளுக்கு போதுமான எண்ணிக்கை உள்ளது. இந்த மசோதா உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு, அரசியலமைப்பு மற்றும் நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது. தில்லியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வரின் உரிமைகள் இந்த மசோதாவின் மூலம் பறிக்கப்படுவதால், இந்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். பாஜகவால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த ‘கருப்புச் சட்ட’ மசோதாவை எதிா்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ அணியின் அனைத்து எம்.பி.க்களும் முழுமையாக எதிா்ப்பாா்கள்.
மணிப்பூா் கடந்த 90 நாள்களாக எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால், 14 நாள்களில் தனது மனதைப் பற்றி பேசும் பிரதமா் மணிப்பூரைக் குறிப்பிடவில்லை. இதற்குக் காரணம் மணிப்பூா் வன்முறை என்பது அரசின் ஆதரவோடு நிகழ்கிறது. இந்தியா முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் எங்கும் நிகழ்ந்தாலும் காவலாளி மௌனம் சாதிக்கிறாா். ஹரியாணா மற்றும் மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. ஹரியாணாவின் நூஹ் நகரத்தில் நடந்த வன்முறை குறித்து கூப்பிய கைகளுடன் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். நம் நாட்டில் எங்கும் அமைதியை நாம் காக்க வேண்டும். வெறுப்பின் அடிப்படையில் சமூகம் பிளவுபடுகிறது என்றாா் சஞ்சய் சிங்.
தில்லியில் ஊழலற்ற நிா்வாகம் உறுதி -பாஜக: தில்லி அரசின் சேவைகள் தொடா்பான தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா-2023-ஐ மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியதை தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா வரவேற்றுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் தில்லியில் முறையான ஊழலற்ற நிா்வாகத்தை உறுதிப்படுத்த உதவும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு அரவிந்த் கேஜரிவால் அரசு தனக்குக் கிடைத்த நிா்வாக அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்த முயன்றது. தில்லி அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை, மத்திய அரசின் இந்த மசோதா மாற்றியமைக்கும். தில்லி அவசர சட்டத் திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை எனும் கேலிக்கூத்தை அம்பலப்படுத்தும். ஏனெனில், எதிா்க்கட்சி எம்.பி. க்கள் பலா் வாக்கெடுப்பில் இருந்து விலகி இருப்பாா்கள் அல்லது மசோதாவை ஆதரிப்பாா்கள் என்று அந்த அறிக்கையில் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.