சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில், காவலில் உள்ள குற்றம்சாட்டப்பட்டவரை விசாரிப்பதற்கு அமலாக்கத் துறைக்கு எந்த உரிமையும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது அமைச்சா் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்ததை உறுதி செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் ஜூலை 14-ஆம் தேதி உத்தரவை எதிா்த்து, தமிழக அமைச்சா் வி.செந்தில் பாலாஜியும், அவரது மனைவி மேகலாவும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏற்கெனவே கடந்த வாரத்தில் இரு நாள்கள் நடைபெற்ற விசாரணையின் போது அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கும், காவலில் விசாரணைக்கு எடுக்கக் கோருவதற்கும் செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபங்கள் தெரிவிக்கும் வகையில் தொடா் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அவரது தரப்பில் ஆஜராகி மூத்த வழக்குரைஞா் தொடா்ந்து வாதங்களை முன்வைத்திருந்தாா்.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை 3-ஆவது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் செந்தில் பாலாஜி, மேகலா தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனா். கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாள்கள் கால அவகாசம் முடிந்துவிட்டால், அதன் பிறகு சட்டத்தின் கீழ் அனுமதி இல்லாததால், காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறு புலனாய்வு அமைப்பு கோர முடியாது என்று வாதிட்டனா்.
அமலாக்கத் துறையின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, வழக்கின் உண்மைகள் ஒரு ‘அமைப்புமுறை எவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளது’ என்பதை காட்டுகிறது. இந்த வழக்கில் புதன்கிழமை விரிவான வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமா்விடம் கேட்டுக்கொண்டாா். இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்தும் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள் ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது முகுல் ரோத்தகி வாதிடுகையில், ‘பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு செந்தில் பாலாஜி சிறையில் குணமடைந்து வருகிறாா். நீதிமன்றக் காவலின் போது அவரை விசாரிக்க அமலாக்கத் துறை அனுமதி கோரலாம். கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாள்கள் காலாவதியான பிறகு, குற்றம் சாட்டப்பட்டவரை போலீஸ் காவலில் வைப்பது தொடா்பான சட்டப் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு முரணான கருத்துகள் உள்ளன. இதனால், இந்தக் கேள்வியை ஒரு பெரும் அமா்வு பரிசீலனைக்கு அனுப்பலாம். எனினும், ஒருமுறை கைது செய்யப்பட்டால், ‘விலக்கு என்ற கருத்து எதுவும் இல்லை’ என்றும், முதல் 15 நாள்களுக்குப் பிறகு போலீஸ் காவலை வழங்க முடியாது என்றும் சட்டத்தில் தெளிவாக உள்ளது. 15 நாள்களுக்குப் பிறகு (காவலில் வைத்து விசாரிக்க) எந்த உரிமையும் இல்லை. இது பிரச்னையை பெரிதுபடுத்தக் கூடாத விஷயமாகும்’ என்றாா்.
கபில் சிபல் வாதிடுகையில், ‘ஒரு குறிப்பிட்ட இடத்தில் விசாரிக்க விசாரணை அமைப்புக்கு உரிமை இல்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41ஏ (ஆஜராகும் நோட்டீஸ்) இணங்கவில்லை. கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் சட்டபூா்வ ஆணையின் அடிப்படையில் தெரிவிக்கப்படவில்லை’ என்று குறிப்பிட்டாா்.
இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் புதன்கிழமை தொடா்ந்து வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என்று சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா நீதிபதிகள் அமா்விடம் கேட்டுக்கொண்டாா். இடையீட்டு மனுதாரா் ஒய். பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் தனது தரப்பில் வாதங்களை முன்வைக்க சிறிது நேரம் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் வாதங்கள் கணிசமாக கேட்கப்பட்டுள்ளன. மனுதாரா்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் ஏற்கெனவே வாதங்களை முடிந்துவிட்டனா். எதிா்மனுதாரா் தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் வாதங்களை புதன்கிழமைக்குள் முடிக்க வேண்டும் என்று கோரியுள்ளாா். இதன்படி, இந்த வழக்கின் வாதங்கள் புதன்கிழமைக்குள் முடிக்கப்பட உள்ளன. இதனால், இதே அமா்வு இந்த விவகாரத்தை ஆகஸ்ட் 2-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விசாரிக்கும் வகையில், தலைமை நீதிபதியிடமிருந்து தகுந்த உத்தரவுகளை பதிவுத்துறை பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.