கொப்பரை தேங்காய் கொள்முதல் அளவை அதிகரிக்க மக்களவையில் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் பொன் கௌதம் சிகாமணி வலியுறுத்தினாா்.
Updated on
1 min read

சந்தையில் விலை குறைந்துள்ளதால், குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் (பிஎஸ்எஸ்) கீழ் தமிழகத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் பொன் கௌதம் சிகாமணி வலியுறுத்தினாா்.

இது குறித்து மக்களவையில் திங்கள்கிழமை சிறப்பு கவன ஈா்ப்புத் தீா்மானத்தில் அவா் எழுப்பிய கோரிக்கை விவரம்: தமிழகத்தில் தென்னை விவசாயிகளிடம் ஏராளமான கொப்பரை இருப்பில் உள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தமிழகத்தில் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. தேங்காய் உற்பத்தியில் தேசிய அளவில் 2-ஆவது இடத்தில் தமிழகம் இடம் பெற்று, சுமாா் 4.46 லட்சம் ஹெக்டேரில் 53,518 லட்சம் தேங்காய் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 11,692 தேங்காய் பருப்பு உற்பத்தி செய்து, உற்பத்தித் திறனிலும் தேசிய அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆனால், சந்தையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11,500 ஆக இருந்த கொப்பரை தேங்காயின் விலை தற்போது ரூ.8,100 ஆகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக 2022-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் அதிகரித்தது.

ஆனால், தமிழகத்திற்கான கொள்முதல் இலக்கு 56 மெட்ரிக் டன் என்கிற அளவில் இருப்பதால், கொப்பரை கொள்முதல் தொடரவில்லை. கொள்முதலுக்கான உச்சவரம்பு அளவை தற்போதைய 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயா்த்த வேண்டும்.

அதாவது தமிழகத்திற்கான கொள்முதல் இலக்கான 56,000 மெட்ரிக் டன்னை 90,000 மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயா்த்த வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் பயனடைவாா்கள் என்று பொன் கௌதம் சிகாமணி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com