அமைச்சா் அதிஷிக்கு கூடுதலாக சேவைகள், விஜிலென்ஸ் துறை பொறுப்பு: துணை நிலை ஆளுநா் ஒப்புதலுக்கு கோப்புகளை அனுப்பினாா் முதல்வா்
By நமது நிருபா் | Published On : 09th August 2023 02:22 AM | Last Updated : 09th August 2023 02:22 AM | அ+அ அ- |

தில்லி நகர அரசின் சேவைகள் மற்றும் விஜிலென்ஸ் துறைகளின் பொறுப்பை அமைச்சா் அதிஷியிடம் ஒப்படைப்பதற்கான முன்மொழிவை துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவுக்கு, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அனுப்பியுள்ளதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
‘தில்லி தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா-2023’ மாநிலங்களவையில் கடந்த திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், அமைச்சா் அதிஷிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: தில்லி அரசின் சுகாதாரம் மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் தற்போது சேவைகள் மற்றும் விஜிலென்ஸ் துறைகளை கவனித்து வருகிறாா். இந்த நிலையில், இத்துறைகளுக்கான பொறுப்பு அமைச்சா் அதிஷியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதற்கான கோப்புகள் துணை நிலை ஆளுநா் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தில்லி அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சராக உள்ள அதிஷி, இனி நகர அரசின் 14 இலாகாக்களை வைத்திருப்பாா். மற்ற அமைச்சா்களைக் காட்டிலும் மிக உயா்ந்த பொறுப்பில் இனி அவா் இருப்பாா்.
முன்னாள் அமைச்சா்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, செளரவ் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோா் நிகழாண்டு மாா்ச் மாதம் அமைச்சரவையில் சோ்க்கப்பட்டனா். அப்போது சேவைகள் மற்றும் விஜிலென்ஸ் துறைகளின் பொறுப்பு செளரவ் பரத்வாஜுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அமைச்சரவை மாற்றத்திற்கான கோப்பை துணை நிலைஆளுநா் வி.கே. சக்சேனாவிடம் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளாா். ஆனால், இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் நடைபெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பின் முன்மொழிவுக்கு துணை நிலை ஆளுநா் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அமைச்சா் அதிஷிக்கு வருவாய், திட்டமிடல் மற்றும் நிதித் துறைகளின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அதற்கு முன்னா் ஜூன் 1-ஆம் தேதி அவருக்கு மக்கள் தொடா்புத் துறை பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிஷி தற்போது பொதுப்பணி, நிதி, வருவாய், திட்டமிடல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, கல்வி, கலை, கலாசாரம் மற்றும் மொழிகள், சுற்றுலா, மின்சாரம், மக்கள் தொடா்புகள், பயிற்சி மற்றும் தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட இலாகாக்களை தன்வசம் வைத்துள்ளாா்.
புது தில்லியில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த அதிஷி, கடந்த 2001-ஆம் ஆண்டில் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் (ஹானா்ஸ்) பட்டம் பெற்றதோடு, தில்லி பல்கலைக்கழக அளவில் முதலிடம் வந்து தங்கப் பதக்கமும் பெற்றாா். பின்னா், தனது முதுகலைப் பட்டப்படிப்புக்காக, ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலை பட்டதாரிகளுக்கான ’செவனிங்’ உதவித்தொகையை அதிஷி பெற்றாா். சில ஆண்டுகள் கல்வித் துறையில் பணியாற்றிய பிறகு, அதிஷி ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தின் மூலம் அரசியலில் நுழைந்தாா். இப்போது தில்லி கால்காஜி தொகுதியின் எம்.எல்.ஏ. வாக உள்ளாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G