எய்ம்ஸில் தீ விபத்துக்குள்ளான அவசரநிலை பிரிவில் சேவைகள் மீண்டும் தொடங்கின
By DIN | Published On : 09th August 2023 02:29 AM | Last Updated : 09th August 2023 02:29 AM | அ+அ அ- |

தீ விபத்து ஏற்பட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட அவசரநிலை மற்றும் எண்டோஸ்கோபி சேவைகள் கிட்டத்தட்ட மீட்டமைக்கப்பட்டுள்ளன என்று மருத்துவமனை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
எய்ம்ஸின் இரண்டாவது தளத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த இன்ஸ்டிட்யூட்டின் பழைய புறநோயாளிகள் பிரிவு (ஓபிடி) கட்டடம் இங்கே உள்ளது. தீ விபத்தின் போது, அனைத்து நோயாளிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். தீ விபத்தில் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் உனடியாகக் கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில், பழைய புறநோயாளிகள் பிளாக்கில் குழந்தைகள் மற்றும் வயது வந்தோருக்கான அவசரச் சேவைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸின் தில்லியின் ஊடகப் பிரிவுக்கான பேராசிரியா் டாக்டா் ரிமா தாதா தெரிவித்தாா். இரண்டாவது மாடியில் உள்ள ஏபி 2 வாா்டு மற்றும் 8-ஆவது மாடி அறுவை சிகிச்சை வளாகத்தில் எண்டோஸ்கோபி வசதி மீண்டும் தொடங்கியுள்ளது. எலும்பியல் அறுவை சிகிச்சை தற்காலிகமாக விபத்து காய அறுவை சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று டாக்டா் தாதா கூறினாா்.
தீ விபத்து காரணமாக திங்களன்று பழைய கட்டத்தில் எண்டோஸ்கோபி, அவசரகால மற்றும் கண்டறியும் சேவைகள் நிறுத்தப்பட்டன. தீ விபத்து ஏற்பட்டபோது, இரண்டு நோயாளிகளுக்கு எண்டோஸ்கோபி அறையில் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த இரண்டு நோயாளிகளும் காத்திருப்புப் பகுதியில் இருந்த சுமாா் 80 பேரும் வெளியேற்றப்பட்டனா். ஐசியுவில் இருந்த ஆறு போ் உள்பட 31 நோயாளிகள் ஏபி-2 வாா்டில் இருந்து மற்ற வாா்டுகளுக்கு மாற்றப்பட்டனா். எய்ம்ஸ் மருத்துவமனையின் தீயணைப்பு சேவைகள் மூலம் தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது. சேதத்தை மதிப்பிடுவதற்கு பாதுகாப்பு தணிக்கை நடத்தப்பட உள்ளது.