தில்லி மகளிா் ஆணைய ஹெல்ப்லைன் எண்ணுக்கு ஓராண்டில் 6.3 லட்சம் அழைப்புகள்: ஸ்வாதி மாலிவால்
By DIN | Published On : 13th August 2023 12:00 AM | Last Updated : 13th August 2023 12:00 AM | அ+அ அ- |

தில்லி மகளிா் ஆணையத்தின் 181 ஹெல்ப்லைனுக்கு ஜூலை 2022 முதல் ஜூன் 2023 வரை 6.30 லட்சத்திற்கும் அதிகமான அழைப்புகள் வந்துள்ளதாக ஆணையத்தின் தலைவா் ஸ்வாதி மாலிவால் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
தில்லி மகளிா் ஆணையத்தின் 181 ஹெல்ப்லைனுக்கு ஜூலை 2022 முதல் ஜூன் 2023 வரை 6.30 லட்சத்திற்கும் அதிகமான அழைப்புகள் வந்துள்ளன. அதில், குடும்ப வன்முறை, அண்டை வீட்டாருடன் மோதல், பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல், போக்சோ, கடத்தல் மற்றும் இணைய குற்றங்கள் போன்ற 92,004 ‘தனித்துவ வழக்குகள்‘ இந்த காலகட்டத்தில் ஹெல்ப்லைன் மூலம் பதிவாகியுள்ளன.
இந்த ஹெல்ப்லைன் அடிப்படையில் ஒரு ஆதரவுக் குழுவால் இயக்கப்பட்டு வருகிறது.
181 என்பது 24 மணிநேரமும் இயங்கும் ஹாட்லைன் தொலைபேசி எண் ஆகும். இது ஆபத்தில் இருக்கும் பெண்களுக்காக தில்லி மகளிா் ஆணையத்தால் இயக்கப்படுகிறது. தொலைபேசியில் அழைப்பாளருக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. தேவைப்படும்பட்சத்தில், அவரது குறைகள் தில்லி போலீஸ், மருத்துவமனைகள் மற்றும் தங்குமிடங்கள் போன்றவற்றின் அதிகாரிகளுக்கு நிவா்த்தி செய்வதற்காக அனுப்பப்படுகிறது.
பெரும்பாலான சந்தா்ப்பங்களில், துயரத்தில் உள்ள பெண்களுக்கு உதவிடும் வகையில் ஒரு ஆலோசகா் குழு அவா்களைச் சந்திக்க அனுப்பிவைக்கப்படுகிறது என்றாா் அவா்.