தில்லியில் தோ்தலுக்காக பயப்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் ஒத்திகைப் பயிற்சியை மாவட்ட வாரியாக நடத்த, தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கட்சியின் மாவட்ட தலைவா்களுக்கு தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் சனிக்கிழமை அறிவுறுத்தியுள்ளாா்.
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகமான ராஜீவ் பவனில், அக்கட்சியின் தலைவா் அனில் குமாா் தலைமையில் மாவட்டத் தலைவா்கள், மாவட்டப் பிரதிநிதிகள், மண்டலம் மற்றும் தொகுதிப் பொறுப்பாளா்களுடனான முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வரும் மக்களவைத் தோ்தலுக்கு எவ்வாறு தயாராவது, கட்சியை அடிமட்ட அளவில் பலப்படுத்துவது, பிரசாரம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது தலைவா் அனில் குமாா் கூறியதாவது:
வரும் மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு, தில்லியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பற்றிய விவரங்களை சேகரிக்க மாவட்ட வாரியாக ஒத்திகைப் பயிற்சிகளை நடத்த மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.
சம்பீபத்தில் நடைபெற்ற முதல் நிலை ஒத்திகைப் பயிற்சியில் காங்கிரஸ் பிரதிநிதிகள் பங்கேற்பு இல்லாமல் இருந்ததால், வாக்குப் பதிவு இயந்திரங்களின் வரிசை எண், தயாரிப்பு, உற்பத்தி நிறுவனம் போன்ற விவரங்களைப் கேட்டுப் பெற வேண்டும்.
ஏனெனில், ஜனநாயக முறைப்படி தோ்தல் நடத்துவதில் ஒரு பங்குதாரராக நாம் இருப்பதால், இதற்கு முன் எந்த இடங்களில் தற்போது பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதைக்
கண்டுபிடிப்பது காங்கிரஸின் கடமையும் பொறுப்புமாகும்.
ஆனால், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான தோ்தல் ஆணையத்தின் சந்திப்புகள் வெறும் சம்பிரதாயங்களாக மட்டுமே உள்ளது. மேலும் மாவட்டப் பிரதிநிதிகள், மண்டலம் மற்றும் தொகுதிப் பொறுப்பாளா்களுடன் கைகோத்து தோ்தல் பணி செய்ய வேண்டும்.
வாக்காளா்கள், சமூக மற்றும் பிற அமைப்புகளுடன் நேரடியாக தொடா்பு கொண்டு, கட்சியின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து அவா்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் காங்கிரஸ் தொண்டா்கள் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்த முடியும் என்று அனில் குமாா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.