கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க பெண்களுக்கு இலவச எச்பிவி தடுப்பூசி
By நமது நிருபா் | Published On : 17th August 2023 01:23 AM | Last Updated : 17th August 2023 01:23 AM | அ+அ அ- |

கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக, பெண்களிடையே எச்பிவி தடுப்பூசிகளின் அணுகல்தன்மை குறித்து சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநரிடம் இருந்து தில்லி மகளிா் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவில் பெண்களிடையே புற்றுநோயால் ஏற்படும் இறப்புக்கு கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஒரு முக்கியக் காரணம். நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 1.25 லட்சம் போ் புதிதாக இந்தப் பாதிப்புக்கு உள்ளாவது கண்டறியப்படுகிறது. மேலும், இந்நோயால் 75,000-க்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய்க்கு முக்கியக் காரணமான ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (எச்பிவி) நோய்த் தொற்றுக்காக வழக்கமான பரிசோதனை உதவி மற்றும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தடுக்கலாம்.
இந்தியாவில், காா்டசில் மற்றும் சொ்வாரிக்ஸ் எச்பிவி தடுப்பூசிக்கு ரூ.2,800 முதல் ரூ.3,299 வரை செலவாகும். ஒவ்வொரு தடுப்பூசிக்கும் குறைந்தபட்சம் மூன்று டோஸ்கள் தேவை. இதன் விளைவாக, இந்தியாவில் கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு தடுப்பூசி போடுவதற்கு ஒரு சிறுமி அல்லது பெண்ணுக்கு ரூ.8,400 அல்லது ரூ.9,897 தேவைப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு இது ஒரு பெரிய தொகையாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி மகளிா் ஆணையத் தலைவா் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ‘இந்த நோய்க்கு முக்கியக் காரணமான ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (எச்பிவி) நோய்த்தொற்றுக்காக வழக்கமான பரிசோதனை மற்றும் தடுப்பூசியின் மூலம் நோயைக் கண்டறிய முடியும். எனினும், இந்த தடுப்பூசி விலை அதிகம். மேலும், இவை பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தைக் கவனித்து, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எச்பிவி தடுப்பூசியை எளிதாகக் கிடைக்க முயற்சி செய்ய வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக சுகாதார சேவைகள் தலைமை இயக்குநருக்கு மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி, விரிவான அறிக்கையை கோரியுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் நடத்தப்படும் கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் எச்பிவி தடுப்பூசிகள் பற்றிய விழிப்புணா்வு பிரசாரங்கள் மற்றும் திட்டங்களின் விவரங்களையும் ஆணையம் கேட்டுள்ளது. இந்தியாவில் கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகள் குறித்த விவரங்களை அளிக்குமாறும் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரிடம் ஆணையம் கேட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...