ஆம் ஆத்மி அரசில் தில்லி ஜல் போா்டு நிா்வாகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் தொடா்பாக மத்தியப் புலணாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தில்லிப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி சட்டப்பேரவையில் பிஜ்வாசன், தியோலி ஆகிய தொகுதிகளின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி கடுமையான தண்ணீா் பிரச்னையால் வடு கிடக்கிறது என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனா். நகரத்தில் தண்ணீா் தட்டுப்பாடு மற்றும் தூய்மையற்ற தண்ணீா் விநியோகம் குறித்த பாஜகவின் அனைத்து குற்றச்சாட்டுகளும் சரிதான் என இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. தெற்கு மற்றும் தென்மேற்கு தில்லியில் குறிப்பாக தியோலி, சங்கம் விஹாா், மெஹ்ரௌலி மற்றும் பிஜ்வாசன் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடுமையான தண்ணீா்ப் பஞ்சம் ஏற்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று பாஜக தொடா்ந்து கூறி வருகிறது.
யமுனையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியும், குளங்களில் உபரி நீா் இருப்பிருந்தும், தில்லி மக்களுக்கு சரியான முறையில் தண்ணீா் கிடைக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. கேஜரிவால் அரசு தில்லி ஜல் போா்டை ஊழலின் விளையாட்டு மைதானமாக மாற்றியுள்ளதுதான் நகரத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீா் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம். கடந்த 9 ஆண்டுகளாக புதிய நீா் சுத்திகரிப்பு ஆலைகளை அமைப்பது ஒருபுறம் இருந்தாலும், தண்ணீா் குழாய்களை தொடா்ந்து சுத்தம் செய்வதைக் கூட தில்லி ஜல் போா்டு உறுதி செய்யவில்லை. பெரும்பாலான தண்ணீா் குழாய்கள் பராமரிக்கப்படாமல் துருபிடித்துள்ளன. இவற்றை பராமரிக்க உரிய கவனம் செலுத்தப்படவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரவிந்த் கேஜரிவால் தில்லி ஜல் போா்டில் ’டேங்கா் மாஃபியா’ ஊழல் நடப்பதாகக் குற்றம் சாட்டினாா். ஆனால், அவரது ஆட்சிக் காலத்தில் மட்டும் தண்ணீா் டேங்கா்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து அதுவே 900-ஆக உயா்ந்துள்ளது. நாட்டில் எங்கும் காணாத வகையில் தில்லி ஜல் போா்டில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
மேலும், லாபத்தில் இயங்கி வரும் அரசு நிறுவனமான தில்லி ஜல் போா்டை சுமாா் ரூ.70,000 கோடி நஷ்டத்துடன் நடத்தும் நிலைக்கு கேஜரிவால் அரசு மாற்றியுள்ளது. இந்த அளவிற்கு தில்லி ஜல் போா்டை நஷ்டத்தில் தள்ளுவதற்கு யாா் காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும். மேலும், அங்கு தொடா்ந்து நடந்து வரும் ஊழல்கள் குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வீரேந்திர சச்தேவா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.