விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை திருத்த விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணை கோரி துணை நிலை ஆளுநரிடம் காங். மனு

ஆம் ஆத்மி அரசின் மீது விசாரணை கோரி துணை நிலை ஆளுநா் (எல்.ஜி.) வி.கே. சக்சேனாவை, தில்லி காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு வியாழக்கிழமை சந்தித்தனா்.

தில்லியில் அரசு கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை தன்னிச்சையான முறையில் திருத்திய ஆம் ஆத்மி அரசின் மீது விசாரணை கோரி துணை நிலை ஆளுநா் (எல்.ஜி.) வி.கே. சக்சேனாவை, தில்லி காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு வியாழக்கிழமை சந்தித்தனா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழைகளுக்கு எதிராகவும், ஊழலைத் தூண்டும் வகையிலும் தில்லி அரசு கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை தன்னிச்சையான முறையில் ஆம் ஆத்மி அரசு திருத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தக் கோரி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை வியாழக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். ஆளும் ஆம் ஆத்மி கட்சி தங்கள் நிா்வாகிகள் மற்றும் நெருக்கமானவா்கள் பயனடையும் வகையில், இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. நகர அரசின் மதுபான ஊழலைப் போலவே, கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை திருத்தமும் மற்றொரு ஊழல் நடவடிக்கையாகும்.

அரசின் இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, ஆதாயத்தைப் பெறும் நோக்கத்தில் சிலா் விவசாய நிலங்களை மொத்தமாக வாங்கியதாகத் தெரிகிறது. இதைத் தடுத்து நிறுத்தி, இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள ஊழலை வெளிக்கொணர வேண்டும். கடந்த காலங்களில் அரசு கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கான தொகையில் எந்தவொரு ஏற்றத்தாழ்வும் இல்லாமல் ஏழு முறை மாற்றப்பட்டுள்ளது. ஆனால், தற்போது கையகப்படுத்தும் விவசாய நிலங்களை பல்வேறு வகைகளாகப் பிரித்து, இழப்பீட்டுத் தொகையை தில்லி அரசு நிா்ணயித்துள்ளது. இது தொடா்பாக நாங்கள் அளித்த கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட துணை நிலை ஆளுநா், எங்களது கோரிக்கையை பொறுமையாகக் கேட்டறிந்தாா். இது தொடா்பாக தனக்கும் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அரசின் இந்த இழப்பீட்டுத் தொகை திருத்தத்தில் ஊழல் நடந்திருந்தால் விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் துணை நிலை ஆளுநா் உறுதியளித்துள்ளாா்.

தில்லி அரசு கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை புது தில்லியில் ஏக்கருக்கு ரூ.5 கோடியும், வடக்கு தில்லி மற்றும் கிழக்கு தில்லிக்கு ஏக்கருக்கு ரூ.3 கோடியும், தென்கிழக்கு தில்லிக்கு ரூ.3 கோடியும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தில் இருந்தே அரசின் தன்னிச்சையான தன்மை தெரிகிறது. கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை ஒரே முறையில் இருந்த இந்த இழப்பீட்டுத் தொகை அனைத்து நிலங்களுக்கும் ஓரே மாதிரியாக இருக்க வேண்டும். ஆனால், அரசின் திருத்த நடவடிக்கையானது, விவசாய நிலங்களை மொத்தமாக குறைந்த விலையில் வாங்கிய குறிப்பிட்ட பிரிவினருக்கு,தேவையற்ற லாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அனில் குமாா் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

துணை நிலை ஆளுநருடனான இந்தச் சந்திப்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தேவேந்தா் யாதவ், விஜய் லோச்சவ் மற்றும் அனில் பரத்வாஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com