சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிப்பு

நிகழ் ஆண்டுக்கான (2023) சாகித்திய அகாதெமி விருதுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.
சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிப்பு

நிகழ் ஆண்டுக்கான (2023) சாகித்திய அகாதெமி விருதுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.

இதில் தமிழ்மொழிப் பிரிவில் "நீர்வழிப் படூஉம்' எனும் நாவலுக்காக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜசேகரனுக்கு (தேவிபாரதி) சாகித்திய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த "நீர்வழிப் படூஉம்' நாவலானது குடிநாவிதர்களின் மூதாதையர் வாழ்க்கை முறையை எடுத்துரைப்பதாகும். இலக்கிய உலகின் உயரிய விருதாக சாகித்திய அகாதெமி விருது கருதப்படுகிறது.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு இந்த விருது ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது.  அதன்படி, நிகழ் ஆண்டுக்கான (2023) விருதுகள் அறிவிக்கப்பட்டன. தில்லியில் உள்ள சாகித்திய அகாதெமியின் தலைவர் மாதவ் கௌசிக் தலைமையிலான செயற்குழு, இதற்கான விருதுகளை அறிவித்தது. 
மூவர் கொண்ட நடுவர் குழு அளித்த பரிந்துரையின்பேரில், இந்த விருதுக்கான நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. அதன்படி 24 இந்திய மொழிகளில் சாகித்திய அகாதெமியின் வருடாந்திர விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தகவலை சாகித்திய அகாதெமியின் செயலர் கே.ஸ்ரீநிவாச ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: 

2023-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுக்கு 9 கவிதை நூல்கள், 6 நாவல்கள், 5 சிறுகதை நூல்கள், 3 கட்டுரைகள், 1 இலக்கிய ஆய்வு நூல் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  இந்த விருதுகளை 24 இந்திய மொழிகளில் சிறந்த நடுவர்கள் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சாகித்திய அகாதெமியின் செயற்குழு அவற்றை தேர்வு செய்து அறிவித்துள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா தில்லியில் மார்ச் 12-இல் நடைபெறுகிறது.

இது ஒரு வார கால இலக்கியத் திருவிழாவாக நடைபெறும். சாகித்திய அகாதெமி 70-ஆவது ஆண்டை வரும் மார்ச் மாதம் 12-ஆம் தேதி நிறைவு செய்ய உள்ளது. வழக்கமாக 300 முதல் 400 எழுத்தாளர்களை விருது விழாவுக்கு அழைப்பது வழக்கம். 

70-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி இந்த முறை 700-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை வெவ்வேறு இந்திய மொழிகளில் இருந்து அழைப்பது குறித்து யோசித்து வருகிறோம். இந்த விழாவில் 150 வெவ்வேறு அமர்வுகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. "இந்திய மொழிகளில் ஏழு பத்தாண்டுகள்' எனும் கருப்பொருளில் இந்த விழா நடத்தப்பட உள்ளது' என்றார் அவர்.

மொத்தம் 24 எழுத்தாளர்களுக்கு சாகித்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்மொழிப் பிரிவில் "நீர்வழிப் படூஉம்' எனும் நாவலுக்காக தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜசேகரனுக்கு (தேவிபாரதி) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஹிந்தி, அஸ்ஸôமி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, மராத்தி, சம்ஸ்கிருதம், சந்தாலி, உருது, நேபாளி, போடோ, டோக்ரி உள்பட 24 மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

மலையாளத்தில் இலக்கிய ஆய்வு நூலுக்காக இ.வி. ராமகிருஷ்ணனுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது தாமிரப் பட்டயம், சால்வை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
 

எனது படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்: 
 

சாகித்திய அகாதெமி விருது எழுத்துலகில் தனது படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என எழுத்தாளர் தேவிபாரதி தெரிவித்தார். விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து எழுத்தாளர் தேவிபாரதி (66) கூறியதாவது:

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் உள்ள எனது படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதைக் கருதுகிறேன். 

இன்றைய காலகட்டத்தில் உள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் அவசரமாக படைப்புகளை வெளிக்கொணர்வதாகவே கருதுகிறேன். நிதானமாகவும், பொறுமையாகவும் எழுதினால், அவர்களது படைப்புகளின் ஆழம் வெளிப்படும் என்றார். 

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், நத்தக்காடையூர் அருகே உள்ள புதுவெங்கரையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் தேவிபாரதி என்ற என். ராஜசேகரன் 1957-இல் பிறந்தவர். இவரது பெற்றோர் நல்லமுத்து, முத்தம்மாள் தம்பதி. சென்னிமலை கொமரப்ப செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வரை படித்துள்ளார். 

கடந்த 1985-ஆம் ஆண்டு தமிழக அரசின் கல்வித் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்த தேவிபாரதி, 2006-இல் விருப்ப ஓய்வுபெற்றார்.

இவர், நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நொய்யல் ஆகிய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார். 

"நீர் வழிப்படூஉம்' நாவல் சிறுகுடி மக்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்வதாகும். இவரது நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ் ஆகிய நாவல்கள் ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள் வாழ்த்து

சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் தேவிபாரதிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.


ஜி.கே.வாசன் (தமாகா): மக்களின் வாழ்வியலை தன் எதார்த்தமான நடையில் எளிதாக  எழுதும் ஆற்றல் படைத்தவர் தேவிபாரதி. அவருக்கு வாழ்த்துகள்.
கமல்ஹாசன் (மநீம): 44 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் தேவிபாரதிக்கு இந்த கௌரவம் மிகவும் பொருத்தமானது.
டிடிவி தினகரன் (அமமுக): சாகித்திய அகாதெமி விருது பெற்றிருக்கும் தேவிபாரதிக்கு வாழ்த்துகள்.
அண்ணாமலை (பாஜக): தவறுகள், மனித இயல்பு என்பதை உணர வைத்து, நமது ஆழ்மனதில் இருக்கும், எதையும் எதிர்பாராத அன்பின் வழி சேரும் "நீர்வழிப் படூஉம்' நாவல், உணர்வுகளின் ஆழத்தைத் தொட்டுச் செல்கிறது என்றால் மிகையாகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com