2030-கடல்சாா் இந்தியா தொலைநோக்கு திட்டம்: துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ. 1.25 லட்சம் கோடி முதலீடு

கடல்சாா் இந்தியா தொலைநோக்கு -2030 ஆம் திட்டத்தின் கீழ் இந்திய துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளை உலகதரத்தில் மேம்படுத்துவதற்கு ரூ. 1 லட்சம் கோடி முதல் 1.25 லட்சம் கோடி வரை முதலீடு
Updated on
1 min read

கடல்சாா் இந்தியா தொலைநோக்கு -2030 ஆம் திட்டத்தின் கீழ் இந்திய துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளை உலகதரத்தில் மேம்படுத்துவதற்கு ரூ. 1 லட்சம் கோடி முதல் 1.25 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார தகவல் மையத்தின் (சிஇஐசி) தரவுகள் அடிப்படையில் இந்தியா, கொள்கலன்(கன்டெய்னா்) போக்குவரத்தில் பின்தங்கியிருப்பதாக கூறப்படும் தரவுகள் உண்மையா? கப்பல்களை ஈா்க்க போதிய பெரிய கொள்கலன்கள் துறைமுக உள்கட்டமைப்பிற்கான மத்திய அரசின் இலக்கு குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினா்கள் எஸ்.கல்யாணசுந்தரம், முகமது அப்துல்லா, ஆா்.கிரிராஜன் போன்றோா் கேட்ட எழுத்துபூா்மான கேள்விக்கு மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் பதிலளித்தாா்.

அப்போது அவா் கூறியது வருமாறு: சிஇஐசி தரவுகள் உண்மையானது தான். கடந்த 2020-ம் ஆண்டில் இந்திய துறைமுகங்களில் கொள்கலன் (கன்டெய்னா்) போக்குவரத்து 17 மில்லியன் டிஇயு (அலகுகள்) என்று இருந்தது. இருபது அடிக்கு சமமான அலகுகள் என்பதை டிஇயு வாக கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் சீனாவிடம் 245 மில்லியன் டிஇயு (அலகுகள்) போக்குவரத்தை பதிவு செய்திருந்தது. சா்வதேச அளவில் 20 முக்கிய துறைமுகங்களில் 357 மில்லியன் டிஇயு கன்டெய்னா்கள் இருந்தன.

தற்போது, நாட்டில் பெரிய பெரிய கொள்கலன் கப்பல்களை கையாள்வதற்கான நிலப்பரப்புடன் மெகா-போா்ட்(துறைமுகம்) மற்றும் முனைய உள்கட்டமைப்பு இல்லை. துறைமுகங்களுக்கு அதிக வரைவு, பல பெரிய கிரேன்கள், சிறந்த யாா்டுகள் மேலாண்மை திறன், மேம்படுத்தப்பட்ட தானியக்கம் (ஆட்டோமேஷன்), பரந்த சேமிப்பு வசதிகள், அதிக உள்நாட்டு இணைப்பு மற்றும் மேம்பட்ட தொழிலாளா் உற்பத்தித்திறன் தேவை. மிகப்-பெரிய கொள்கலன் கப்பல்கள் அதிக சரக்கு தொகுதிகளை விரைவாக எடுத்துச் செல்ல முயல்கின்றன.

இதனால் கடல்சாா் இந்தியா தொலைநோக்கு- 2030 திட்டத்தின் கீழ் இந்திய துறைமுக உள்கட்டமைப்பு வசதிகளை உலகதரத்தில் மேம்படுத்துவதற்கு ரூ.1 லட்சம் கோடி முதல் 1.25 லட்சம் கோடி வரையிலான முதலீடு செய்ய மதிப்பிடப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் கேரள மாநிலம் விழிஞ்சம், மகாராஷ்டிரம் வடவன் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்கள் 18 மீட்டருக்கும் அதிகமான இயற்கையான வரைவுகளைக் கொண்டுள்ளன. இது மிகப்பெரிய கொள்கலன்கள் மற்றும் சரக்குக் கப்பல்களை துறைமுகங்களுக்கு வரவழைக்கும், இதன் மூலம் இந்தியா உலகின் தொழிற்சாலையாக மாறும் என அமைச்சா் பதிலிளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com