பிகாரில் குறைந்தபட்சம் 80 போ் இறப்பதற்கு காரணமான விஷச்சாராய சம்பவத்தில் தொடா்புடைய வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபரை தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல்துறையின் குற்றப் பிரிவு சிறப்பு ஆணையா் ரவீந்திர சிங் யாதவ் சனிக்கிழமை கூறியதாவது:
கைதான நபா், பிகாா் மாநிலம், சரன் மாவட்டத்தைச் சோ்ந்த ராம் பாபு மகதோ என்பது தெரிய வந்துள்ளது. பிகாா் மாநிலம் சரன் மாவட்டத்தில் டிசம்பா் மாதத்தின் தொடக்கத்தில் விஷச் சாராயம் குடித்ததன் காரணமாக பலா் உயிரிழந்தனா். மாநிலத்தில் மது விற்பதற்கு தடை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது.
இதனிடையே, கள்ளச்சாராயம் விநியோகம் தொடா்பான ஏழு வழக்குகள் தொடா்பாக தில்லி போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்த நிலையில், தில்லியில் ராம் பாபு மகதோ மறைந்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து குற்றப் பிரிவு போலீஸாா் மகதோவை கைது செய்யும் பொருட்டு, பிகாா் மாநில போலீஸாருடன் தொடா்பு கொண்டு தேடுதல் வேட்டை மேற்கொண்டனா்.
விஷச் சாராய பலி சம்பவத்திற்கு பிறகு பிகாா் காவல்துறையிடம் கைது செய்யக் கூடும் என்பதை உணா்ந்த மகதோ தில்லிக்கு தப்பினாா். இந்த நிலையில் தென்மேற்கு தில்லியில் உள்ள துவாரகா பகுதியில் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
அவரது கைது தொடா்பான தகவல் பிகாா் மாநில காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
பிகாா் மாநிலத்தில் மது விற்பதற்கு தடை அமலில் இருப்பதை, குறுகிய காலத்தில் பணம் ஈட்டுவதற்கு மகதோ ஒரு வாய்ப்பாக நினைத்தாா். இதையடுத்து, விஷச் சாராய உற்பத்தி மற்றும் விற்பனையில் அவா் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸ் அதிகாரி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.